விவசாய சங்கத்தினர் சாலை மறியல்
விவசாய சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்:
சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் திருமானூர் பஸ் நிலையம் அருகே விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணியன் தலைமை தாங்கினார்.
நெல் கொள்முதலுக்கு விவசாயிகளை நேரடியாக ஆன்லைனில் பதிவு செய்யக்கூறி அலைய விடக்கூடாது. பழைய முறைப்படி சிட்டா, அடங்கல் உள்ளிட்டவற்றை விவசாயிகளிடம் வழங்கி, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
போக்குவரத்து நெருக்கடி
இதைத்தொடர்ந்து திருமானூர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகிகள் கரும்பாயிரம், வரப்பிரசாதம், ஆறுமுகம் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். போராட்டத்தால் சிறிது நேரம் அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.