தேங்கி கிடக்கும் காய்கறி கழிவுகளால் வியாபாரிகள் அவதி
தஞ்சை தற்காலிக காமராஜர் மார்க்கெட்டில் தேங்கி கிடக்கும் காய்கறிகழிவுகளால் வியாபாரிகள் அவதியடைந்து வருகின்றன. இதனை சீரமைக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை தற்காலிக காமராஜர் மார்க்கெட்டில் தேங்கி கிடக்கும் காய்கறிகழிவுகளால் வியாபாரிகள் அவதியடைந்து வருகின்றன. இதனை சீரமைக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்காலிக மார்க்கெட்
தஞ்சை குழந்தை ஏசு கோவில் அருகே உள்ள தற்காலிக காமராஜர் மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடந்து வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், தேனி, சிவகங்கை, நிலக்கோட்டை, திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
மேலும் இங்கிருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் சில்லைறை வியாபாரிகளும் விற்பனைக்காக காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
தூய்மை செய்ய வேண்டும்
தற்காலிக மார்க்கெட்டை மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் கொண்டு தூய்மை செய்யப்படும். இதனால் மார்க்கெட்டு பகுதிகளில் காய்கறி கழிவுகள் சுத்தம் செய்யப்படும். ஆனால் கடந்த சில வாரங்களாக தூய்மை செய்ய பணியாளர்கள் வருவதில்லை. இதனால் மார்க்கெட் முழுவதும் காய்கறிகழிவுகளும், குப்பைகளும் குவிந்து கிடக்கிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தற்காலிக மார்க்கெட்டில் வாரத்திற்கு 3 முறை தூய்மை பணியாளர்கள் தூய்மை செய்வார்கள். ஆனால் கடந்த சில வாரங்களாக தூய்மை செய்யவில்லை. இதனால் மார்க்கெட் முழுவதும் காய்கறி கழிவுகளாக காட்சி அளிக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வண்ணம் உள்ளன. திடீரென மழை பெய்தால் மேலும் மோசமான நிலையில் காட்சி அளிக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மார்க்கெட் பகுதியை தூய்மை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.