கர்நாடக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்; குமாரசாமி அறிவிப்பு
ஜனதாதளம் (எஸ்) ஆட்சிக்கு வந்தால் கர்நாடக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று குமாரசாமி அறிவித்துள்ளார்.
பெங்களூரு: ஜனதாதளம் (எஸ்) ஆட்சிக்கு வந்தால் கர்நாடக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று குமாரசாமி அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
சட்டசபையில் தீர்மானம்
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடக்கிறது. இதில் ஜனதா தளம் (எஸ்) வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால் நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். குழந்தைகளின் உயிரை பறிக்கும் இந்த தேர்வு நமக்கு தேவை இல்லை. இது சிலரின் பாக்கெட்டுகளை நிரப்பும் தேர்வாக மாறிவிட்டது. அதனால் அதற்கு முடிவு கட்டுவோம்.
கேள்வி கேட்டால் துரோகம் செய்வதாக உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் குறை கூறியுள்ளார். அவரது இந்த கருத்துக்கு என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் துரோகிகள் என்று அவர் கூறியிருக்கிறார். அவர் யாரை இவ்வாறு சொல்கிறார் என்பதை கூற வேண்டும். நான் மருத்துவ கல்லூரி நடத்தவில்லை.
மாணவர்களின் சுயமரியாதை
என்ஜினீயரிங் கல்லூரியையும் நடத்தவில்லை. ஒரு சிறிய தொழிலை கூட நான் நடத்தவில்லை. பிடதியில் உள்ள விவசாய தோட்டத்தை தவிர எனக்கு என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. ஆயினும் அஸ்வத் நாராயண் எனக்கு எதிராக கருத்துகளை கூறியுள்ளார். இது அவரது குணத்தை காட்டுவதாக உள்ளது. மத்திய மந்திரி ஒருவர், நீட் தேர்வில் வெற்றி பெற முடியாதவர்கள் வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்க செல்கிறார்கள் என்று அங்கு படிக்கும் மாணவர்களின் சுயமரியாதையை அவமதித்துள்ளார்.
நீட் தேர்வு வந்த பிறகு ஏழை, நடுத்தர மக்களின் குழந்தைகளுக்கு அநீதி ஏற்படுகிறது. இது உண்மை இல்லையா?. லட்சக்கணக்கான ரூபாயை பறித்து பெற்றோரின் ரத்தத்தை குடிக்கும் பயிற்சி மையங்கள் அரசின் கண்களுக்கு தெரியவில்லையா?. இந்த அரசுக்கு கண்-காது இல்லை என்று நினைக்க வேண்டி இருக்கிறது.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.