சசிகலா தலைமையின் கீழ் அ.தி.மு.க. செல்லும்
சசிகலா தலைமையின் கீழ் அ.தி.மு.க. செல்லும் என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.;
தஞ்சாவூர்:
சசிகலா தலைமையின் கீழ் அ.தி.மு.க. செல்லும் என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
கார்த்தி சிதம்பரம் பேட்டி
தஞ்சை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், நிர்வாகிகள் டி.பி.எம்.ராஜூ மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
சசிகலா தலைமையின் கீழ் அ.தி.மு.க.
எங்கள் கூட்டணி பலமான கூட்டணி. கடந்த எம்.பி. தேர்தல், எம்.எல்.ஏ. தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற்றோம். தி.மு.க. கூட்டணியுடன் எங்கள் கட்சி அனைத்து தேர்தல்களிலும் அமோக வெற்றி பெறும்.
அ.தி.மு.க. ஒற்றை தலைமையுடன் செயல்பட்டு வருவதுதான் வழக்கம். சசிகலா தலைமையில் அ.தி.மு.க., செல்லும் என எனது அரசியல் பார்வையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறினேன். அது நடக்கும் போல இருக்கிறது. எனவே சசிகலாவுடன் அ.தி.மு.க. ஒன்று சேர்வதால் பலம். இதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது எல்லாம் தெரியாது.
பெரும்பான்மை இல்லை
அ.தி.மு.க., ஒரு பெரிய கட்சி, அவர்களுக்கான வாக்கு வங்கி உள்ளது. அ.தி.மு.க. விற்கு உள்ள வாக்கு வங்கியால், காங்கிரஸ் கட்சிக்கு பலவீனம் கிடையாது. எந்த மாநகராட்சியிலும், நகராட்சியிலும் காங்கிரஸ் கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடையாது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் மாநகராட்சி மேயராக, நகராட்சியில் தலைவராக வர வேண்டும் என்றால் பெரும்பான்மையான கட்சியான தி.மு.க. ஆதரவுடன் தான் வர வேண்டும்.
அப்படி உள்ள சூழலில், கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் மேயராக வரும்போது, தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கு ஏமாற்றம் என்பது வாடிக்கையான ஒன்று தான். ஆனால் அவர்களை சமாதானம் செய்யக்கூடிய இடத்தில் தி.மு.க. தலைமை தான் உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருந்து இருந்தால், 1967-ம் ஆண்டுக்கு பிறகு நாங்கள் ஆட்சி அமைத்து இருப்போம். பெரும்பான்மை இல்லாததால் தான் கூட்டணி வைத்துள்ளோம்.
ஏற்க முடியாது
இன்றைக்கு காங்கிரஸ் கட்சி உள்ள நிலைமையில் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது என்பது தான் சாதுர்யமானது. தமிழகத்தில் பெரிய, சிறிய கட்சிகள் கூட்டணி மூலமாக தேர்தலை சந்திப்பது அரசியல் சாதுர்யமானது.
மத்திய அரசு, மக்களுக்கோ, மாநில அரசுக்கோ யாருக்கும் செவி சாய்ப்பது கிடையாது. அவர்களிடம் இருக்கும் பெரும்பான்மையால் எல்லாவற்றையும் சாதித்துக்கொள்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு இந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியானால் கோவை மற்றும் காரைக்குடியில் ஏன் வெற்றி பெறவில்லை?. இது குறித்து புள்ளி விபரங்களுடன் பேச நான் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.