நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகை

சிதம்பரபுரம் 1-வது வார்டை வேறு பஞ்சாயத்தில் சேர்த்ததைக் கண்டித்து, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டனர்.

Update: 2022-03-03 19:19 GMT
நெல்லை:
சிதம்பரபுரம் 1-வது வார்டை வேறு பஞ்சாயத்தில் சேர்த்ததைக் கண்டித்து, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டனர்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் யூனியன் சிதம்பரபுரம்-யாக்கோபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பெர்லிங் ராஜா, சிதம்பரபுரம் ஊர் மக்கள் மற்றும் பா.ஜனதா மாவட்ட தலைவர் மகாராஜா, பொதுச்செயலாளர்கள் கணேசமூர்த்தி, முத்துகுமார், துணைத்தலைவர்கள் டி.வி.சுரேஷ், சீதா குத்தாலிங்கம், வள்ளியூர் ஒன்றிய தலைவர்கள் செல்வபாண்டி, கேசவன் உள்ளிட்டோர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.
அதில் கூறிஇருப்பதாவது:-

வேறு பஞ்சாயத்தில்  சேர்த்ததற்கு எதிர்ப்பு

ராதாபுரம் தாலுகா வள்ளியூர் யூனியன் சிதம்பரபுரம் -யாக்கோபுரம் பகுதியானது மக்கள்தொகை அடிப்படையில் நிர்வாக வசதிக்காக பழவூர் ஊராட்சியில் இருந்து 1964-ம் ஆண்டு தனியாக பிரிக்கப்பட்டு சிதம்பரபுரம்-யாக்கோபுரம் என ஊராட்சி செயல்பட்டு வந்தது.

இதில் 4 முறை சிதம்பரபுரத்தைச் சேர்ந்தவர் தலைவராக தேர்வானதால், யாக்கோபுரம் பகுதியை சேர்ந்தவர் தலைவர் ஆகும் நோக்கத்தில், சிதம்பரபுரம் 1-வது வார்டு பகுதி மக்களை பழவூர், ஆவரைக்குளம் ஊராட்சிகள் பகுதியில் சேர்த்து விட்டனர்.

பின்னர் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் சிதம்பரபுரம்-யாக்கோபுரம் ஊராட்சி வாக்காளர் பட்டியலில் சேர்த்தனர். தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் 1-வது வார்டு வாக்காளர் பட்டியலை மீண்டும் பழவூர், ஆவரைக்குளம் ஊராட்சிகளின் வாக்காளர் பட்டியலில் இணைத்து விட்டனர்.

தொடர் போராட்டம்

இதனால் சிதம்பரபுரம் 1-வது வார்டு மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். அப்போது யாக்கோபுரத்தை சேர்ந்தவர் தலைவராக வெற்றி பெற்றார். 
இதையடுத்து சிதம்பரபுரம் 1-வது வார்டு பகுதி மக்களுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி ரசீதுகள் வழங்கப்படவில்லை. குடிநீர் குழாய், தெருவிளக்கு பராமரிப்பு தடை செய்யப்பட்டது. 

இதனைக் கண்டித்து கடந்த மாதம் 15-ந்தேதியில் இருந்து சிதம்பரபுரம் சந்திப்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். 
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்