தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-03-03 19:07 GMT
2 ஆசிரியர்களே பாடம் கற்பிக்கும் அவலம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் ரங்காபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் 110 மாணவ மாணவிகளுக்கும் மேல் படித்து வருகிறார்கள். அங்கு மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பிக்க 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுகக வேண்டும்.

-எம்.விஜயராகவன், ரங்காபுரம்.
அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் அவலம்

  திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் 70-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன. ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்கிறார்கள். அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. ஷேர் ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -ஜாகிர்உசேன், தூசி.

ஆபத்தான பள்ளம்

 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஆயாக்கார வீதியில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு தினமும் ஏராளமான மாணவிகள் படிக்க வருகின்றனர். மயானத்துக்கும் அந்த வழியாக தான் செல்ல வேண்டும். அந்த வழியில் கடந்த 3 மாதமாக ஆபத்தான பள்ளம் உள்ளது. இரவில் வருபவர்கள் தடுமாறி குழியில் விழுந்து விடுகின்றனர். அந்தக் குழியை மூட சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -டி.ஜுனைத்அகமது, பேரணாம்பட்டு.

தீப்பெட்டியிலும் மோசடி

 ஒரு தீப்பெட்டியின் விலை ரூ.2 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதில் சராசரியாக 70 குச்சிகள் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர். குடியாத்தம் பகுதியில் தயாரிக்கும் தீப்பெட்டிகளில் 30 அல்லது 35 குச்சிகளே வைத்து ஏமாற்றுகிறார்கள். இதை, அதிகாரிகள் சோதனை செய்து மோசடி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -எம்.ராதாகிருஷ்ணன், வாணியம்பாடி.

கழிவுநீர் கால்வாயை மூடுவார்களா?

வேலூர் சத்துவாச்சாரி பகுதி-1, 6-வது தெருவில் திறந்தவெளி கால்வாய் பல மாதங்களாக மூடப்படாமல் கழிவுநீர் தேங்கும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை சிமெண்டு சிலாப் மூலமாக மூட கேட்டுக்கொள்கிறேன்.
  -சுஹேல்அகமது, வேலூர்.

வேகத்தடை வேண்டும்

 ஆரணி-போளூர் நெடுஞ்சாலையில் மலையாம்பட்டு கூட்ரோடு அருகே அரசு உயர்நிலைப்பள்ளி, துணை சுகாதார நிலையம், விவசாய நிலங்கள் அதிகமாக இருக்கும் பகுதியாக உள்ளது. இந்தச் சாலையில் அதிகமாக வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையை கடக்க பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், நோயாளிகள் அச்சப்படுகின்றனர். எனவே, ஆரணி-போளூர் நெடுஞ்சாலை அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்.
  -ராகவேந்திரா, ஆரணி.

முழுநேர சித்த மருத்துவரை நியமிப்பார்களா?

கே.வி.குப்பம் ஆரம்ப சுகாதார மையத்தில் சித்த மருத்துவப் பிரிவு உள்ளது. அதற்குரிய மருத்துவர் 6 மாதத்துக்கு முன்பு இட மாறுதல் பெற்று சென்று விட்டார். அவருக்கு பதில் இதுவரை சித்த மருத்துவர் நியமிக்கப்படவில்லை. வாரத்தில் புதன், சனி ஆகிய இரு நாட்கள் மட்டும் வெளியூரில் இருந்து பகுதிநேரமாக மருத்துவர் ஒருவர் வந்து போவதாகத் தெரிகிறது. மற்ற நேரங்களில் சித்த மருத்துவம் பார்க்க ஆர்வம் உள்ளவர்களுக்கு ஏமாற்றமே கிடைக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சித்த மருத்துவரை முழுநேரமாக நியமிக்க வேண்டும்.
  -வம்சிகிருஷ்ணன், கே.வி.குப்பம்.

வீணாக செல்லும் குடிநீர்

  வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே காட்பாடி செல்லும் சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையோரம் தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வீணாக செல்லும் குடிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -மலரவன், வேலூர்.
  

மேலும் செய்திகள்