அம்மன் கோவில்களில் மயானக்கொள்ளை
திண்டிவனம் மற்றும் மேல்மலையனூர் பகுதி அம்மன் கோவில்களில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டிவனம்,
திண்டிவனம் செஞ்சி ரோட்டில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்துக்கு முக்கிய வீதிகள் வழியாக அம்மன் ஊர்வலமாக மயானத்துக்கு சென்றார். அப்போது பக்தர்கள் பலர் அம்மன் வேடம் அணிந்து சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து அங்கு மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊர்வலமாக மயானத்துக்கு சென்றார். அங்கு மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் அம்மன் வேடம் அணிந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா சீனுவாசன், ஆனந்தன் தலைமையில் பருவத ராஜகுலத்தினர் செய்திருந்தனர்.
மேல்மலையனூர்
மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் ஊர்வலமாக மயானத்துக்கு சென்றார். இதையடுத்து அங்கு மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் முதுகில் அலகு குத்தி பறவை காவடி எடுத்து அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர், பருவதராஜகுல மீனவ சமூகத்தினர், கிராம மக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.