தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்களை பிடிக்க வேண்டுகோள்
திருச்சி மாவட்டம், பீமநகர் சுற்று வட்டார பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. நாய்கள் சாலையின் நடுவில் படுத்து கொள்வதால், மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்வோரை நாய்கள் துரத்தி சென்று கடிக்கிறது. சாலைகளில் நாய்கள் திடீரென்று குறுக்கும், நெடுக்குமாக ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபேல் குணசீலன், காஜாபேட்டை, திருச்சி.
பன்றிகள் தொல்லை
திருச்சி, திருவெறும்பூர் ஒன்றியம் , குண்டூர் பர்மா காலனியில் கடந்த சில நாட்களாகவே பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பன்றிகளை பிடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், குண்டூர் பர்மா காலனி. திருச்சி.
குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படுமா?
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், ஆமணக்கம்பட்டி, தாதக்கவுண்டம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருச்சி.