மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
தோகைமலை
தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலை மலை மீது அமைந்துள்ள விராசிலைஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் சிவராத்திரி விழா நடைபெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்வதற்காக திருச்சி மாவட்டம், அம்மாபேட்டையை சேர்ந்த ஆறுமுகம் ( வயது53) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது அங்கு கோவில் முன்பு உள்ள தெப்பகுளம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் குளித்தலை மணப்பாறை நெடுஞ்சாலை கழுகூர் வழியாக 3 நபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லாமல் தள்ளிக்கொண்டே வந்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த போலீசார் 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அது திருடுபோன ஆறுமுகத்தின் மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் கல்லுக்குடி பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ்(24), முத்துகிருஷ்ணன் (23) மற்றும் புங்கனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இவர்கள் மீது ஏற்கனவே போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களை குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.