ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
குறிஞ்சிப்பாடி அருகே ரூ.2 லட்சம் புகையிலை பொருட்களை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
குறிஞ்சிப்பாடி,
நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் உத்தரவின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் நேற்று குறிஞ்சிப்பாடி அருகே ஆடூர்அகரம் கிராமத்தில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது சிதம்பரத்தில் இருந்து குறிஞ்சிப்பாடி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதைனையில், அந்த காரில் 3 அட்டைப் பெட்டிகள், 7 சாக்கு மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்ற புகையிலை பொருட்கள் இருந்தது.
கைது
இதையடுத்து அந்த காரில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் திட்டக்குடி தாலுகா கீழ்ச்செருவாய் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் ரஜினிவிஜய் (வயது32), தமிழ்மணி மகன் இளஞ்செழியன் (33), காட்டுமன்னார்கோவில் தாலுகா சோழத்தரம் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் மகன் சிவக்குமார் (31) ஆகிய 3 பேர் என்று தெரிய வந்தது.
இவர்கள் சிதம்பரம் பகுதியில் இருந்து இந்த புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள்
இதேபோல் மீனாட்சிபேட்டை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, மோட்டார் சைக்கிளில் வந்த மீனாட்சி பேட்டை வேதகிரி மகன் குமரவேல் (21) என்பவர் 4 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து குமரவேலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
இவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.