கரூர் மாநகராட்சி முதல் மேயருக்கான மறைமுக தேர்தல்
தி.மு.க. சார்பில் போட்டியிடும் கரூர் மாநகராட்சி முதல் மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மறைமுக தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
கரூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
கரூர் நகராட்சி, மாநகராட்சியாக கடந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. கரூர் மாநகராட்சி 48 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் கரூர் மாநகராட்சி 48 வார்டுகளில் 42 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒரு வார்டிலும் சுயேச்சை 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. இதனையடுத்து முதல் கரூர் மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. இதனையடுத்து வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் நேற்றுமுன்தினம் பதவியேற்று கொண்டனர். கரூர் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மறைமுக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கரூர் மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து வெற்றிபெற்ற பெண் கவுன்சிலர்கள் மேயர் பதவிக்கு காய் நகர்த்தி வந்தனர்.
மேயர் வேட்பாளர்
இந்நிலையில் நேற்று தி.மு.க. தலைமை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயருக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. அந்தவகையில் தி.மு.க. சார்பில் கரூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு 4-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கவிதா கணேசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு 46-வது வார்டில் வெற்றிபெற்ற தாரணி சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முதல் கரூர் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயருக்கான மறைமுக தேர்தல் இன்று நடக்கிறது. கரூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் காலை 9.30 மணிக்கு மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலும், மதியம் 2.30 மணிக்கு மாநகராட்சி துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலும் நடைபெற உள்ளது.