சொகுசு ஓட்டலில் 20 கவுன்சிலர்கள் தங்கவைப்பு
அதிகாரபூர்வ வேட்பாளராக சுந்தரி அறிவிக்கப்பட்ட நிலையில் மேயர் பதவிக்கு மற்றொரு தி.மு.க. கவுன்சிலரும் போட்டியிடுகிறார். இதனால் அவர் தனக்கு ஆதரவான 20 கவுன்சிலர்களை சொகுசு ஓட்டலில் தங்க வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர்,
கடலூர் மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதி நடைபெற்றது. 45 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 286 பேர் போட்டியிட்டனர். இதில் 27 வார்டுகளில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் 3 வார்டுகளிலும், தமிழக வாழ்வுரிமை கட்சி 3 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், பா.ம.க., பா.ஜ.க. தலா ஒரு வார்டிலும், 3 வார்டுகளில் சுயேச்சையும் வெற்றி பெற்றன.
இதையடுத்து வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) மாநகராட்சி மேயர், துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.
28 கவுன்சிலர்கள் மாயம்
இந்நிலையில் கடலூர் மாநகராட்சியில் போட்டியிடும் மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். அதன்படி மேயர் பதவிக்கு 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுந்தரியும், துணை மேயர் பதவிக்கு வி.சி.க.வை சேர்ந்த 34-வது வார்டு கவுன்சிலர் தாமரைச்செல்வனும் போட்டியிடுகின்றனர். இதற்கிடையே நேற்று மாலை தி.மு.க. கவுன்சிலர்கள் 20 பேர் மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 8 கவுன்சிலர் என மொத்தம் 28 கவுன்சிலர்கள் மாயமானதாக தகவல் பரவியது. இதையடுத்து மாயமான கவுன்சிலர்களின் செல்போன் எண்களை கட்சி நிர்வாகிகள் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் மேயர் பதவியை கைப்பற்றும் முனைப்பில் கவுன்சிலர்கள் கடத்தப்பட்டு விட்டதாகவும், அரசியல் கட்சியினரிடையே பேசப்பட்டது.
அதிர்ச்சி
இதுகுறித்து அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, கடலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட தி.மு.க.வை சேர்ந்த 2 கவுன்சிலர்கள் முயற்சி செய்தனர். இதனால் அவர்களிடையே கடும் போட்டி நிலவி வந்தது. அவர்கள் 2 பேரும் தி.மு.க. கூட்டணி கட்சி மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி கவுன்சிலர்களிடம் ஆதரவு திரட்டி வந்தனர். இதற்கிடையே நேற்று மேயர் வேட்பாளராக சுந்தரி அறிவிக்கப்பட்டார்.
இதனால் எப்படியும் மேயர் பதவி தனக்கே கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்த மற்றொரு தி.மு.க. கவுன்சிலருக்கு இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த கவுன்சிலர் அடுத்த கட்ட நகர்வுக்கு சென்றார். அதன்படி நேற்று மாலை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் 20 பேரையும், பிற கட்சிகளை சேர்ந்த 8 கவுன்சிலர்களையும் சந்தித்து அவர்களது ஆதரவையும் பெற்றுள்ளார்.
சொகுசு ஓட்டலில் தங்க வைப்பு
இதில் 20 கவுன்சிலர்களை புதுச்சேரியில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 8 கவுன்சிலர்கள் மாயமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் 28 கவுன்சிலர்களும் இன்று மறைமுக தேர்தல் தொடங்குவதற்குள் கடலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து விடுவார்கள் என்றனர். இதில் வெற்றிபெற்று மேயராகபோவது யார்? என்பது குறித்து மதியத்திற்குள் தெரிந்து விடும். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.