தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

Update: 2022-03-03 17:31 GMT
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-


வீணாகும் குடிநீர்

நீலகிரி மாவட்டம் கூடலூர் காளம்புழா செல்லும் சாலையில் குடிநீர் குழாய்கள் பல இடங்களில் உடைந்து காணப்படுகிறது. இதனால் குடிநீர் வீணாகி சாலையில் ஓடுகிறது. இதன் காரணமாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் பகுதிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை நீடித்து வருகிறது. எனவே கோடை காலத்தில் ஏற்படும் தட்டுப்பாட்டை சமாளிக்க பழுதடைந்த குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்பாஸ், கூடலூர்.

கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்

  சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலையில் பிரசித்திபெற்ற மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. தைப்பூசம் தேர் திருவிழா உள்ளிட்ட முக்கிய திருவிழாவின்போது கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
  இந்நிலையில், கோவில் வளாகத்தில் போதிய கழிப்பிட வசதி இல்லாத தால் கூட்டத்தின் போது பக்தர்கள் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே பக்தர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதலாக கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
  பானு, சுல்தான்பேட்டை.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி 4 கார்னர் பகுதியில் இருந்து சீரபாளையம், போடிபாளையம் செல்லும் சாலையின் ஓரங்களில் அதிக அளவு குப்பை கொட்டப்பட்டு வருகிறது. மேலும் சிலர் அவற்றுக்கு தீ வைக்கிறார்கள். இதனால் அதிகளவில் புகை மூட்டம் ஏற்படுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் புகை மூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரிவது இல்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
  சந்திரன், மலுமிச்சம்பட்டி.

காட்டு பன்றிகள் தொல்லை

  கோவை அருகே உள்ள காருண்யா நகர் ஈடன் கார்டன், ஆர்.எம்.ஆர். கார்டன் பகுதியில் பகல் நேரத்திலும் காட்டுபன்றிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. சில நேரத்தில் இந்த பன்றிகள் பொதுமக்களை தாக்கிவிடுகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் இருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து காட்டுப்பன்றி தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
  நிவின்ரக்சன் ரன்வீர்வர்சன், காருண்யாநகர்.

பஸ்கள் நீட்டிக்கப்படுமா?

  கோவை அருகே உள்ள சோமனூரில் இருந்து திருப்பூருக்கு 5, 5ஏ., 5பி, 5சி, 5டி ஆகிய டவுன்பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களை கருமத்தம்பட்டி வரை நீட்டித்தால் பயணிகளுக்கு உதவியாக இருக்கும். இந்த பஸ்கள் சோமனூர் வரை மட்டுமே வருவதால் அங்கிருந்து கருமத்தம்பட்டிக்கு ஆட்டோ பிடித்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பஸ்களை கருமத்தம்பட்டி வரை நீட்டிக்க வேண்டும்.
  மோகன், சோமனூர்.

காய்ந்த மரம்

  கோைவ சிங்காநல்லூர் காமராஜர் சலையில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே ஒரு மரம் உள்ளது. இந்த மரம் காய்ந்த நிலையில் எந்த நேரத்திலும் சரிந்து கீழே விழக்கூடிய நிலையில் இருக்கிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் எந்த நேரத்திலும் சரிந்து விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த ஆபத்தான மரத்தை அகற்ற வேண்டும்.
  மீனா இளங்கோவன், கோவை.

சாலையில் ஆபத்தான பள்ளம்

  ேகாவை திருச்சி ரோட்டில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையில் உள்ள தனியார் பள்ளி முன்பு சாலையில் பள்ளம் இருந்தது. அந்த பள்ளத்தில் கான்கிரீட் கலவை கொட்டப்பட்டது. தற்போது அதில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படக்கூடிய அபாய நிலையும் நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆபத்தான பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.
  ஆதிபைரவி, கோவை.

பாராக மாறிய பள்ளி வளாகம்

  சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் பாரதிபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் பழுதானதால் இந்த பள்ளி அருகே உள்ள உயர்நிலை பள்ளியில் செயல்பட்டு வருகிறது. தற்போது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் செயல்படாமல் இருப்பதால் அங்கு சட்டவிரோத செயல்கள் அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாக பலர் அங்கு அமர்ந்து மது அருந்துவதால் பாராக மாறி வருகிறது. எனவே இங்கு அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பிரசாந்த், பள்ளபாளையம்.

கருகி வரும் செடிகள்

  பொள்ளாச்சியில் இருந்து அம்பராம்பாளையம் செல்லும் மீன்கரை சாலையில் சீனிவாசபுரம் வரை சாலையின் நடுவே நெடுஞ்சாலைத் துறையினர் அரளி செடிகள் வைத்து பராமரித்து வந்தனர். தற்போது கோடைகாலம் என்பதால் அந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றாததால் அவை கருகி வருகிறது. இரவு நேரத்தில் சாலையின் மற்றொரு புறத்தில் எதிரே வரும் வாகனங்களின் முகப்புவிளக்கின் ஒளி படக்கூடாது என்பதற்காகதான் இந்த செடிகள் வைக்கப்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து கருகி வரும் செடிகளுக்கு முறையாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  தாமரை தமிழ்நிலவு, பொள்ளாச்சி.

பொதுக்கழிப்பிடம் இல்லை

  மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் பொதுகழிப்பிடம் இ்ல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, இந்த பகுதியில் பொதுக்கழிப்பிடம் அமைத்து கொடுக்க வேண்டும்.
  கமல், தேக்கம்பட்டி.
  

மேலும் செய்திகள்