திருவாரூர் தியாகராஜர் கோவிலில் காலபைரவர் உற்சவம்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி காலபைரவர் உற்சவம் நடந்தது.
திருவாரூர்:-
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி காலபைரவர் உற்சவம் நடந்தது.
பங்குனி உத்திர திருவிழா
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாவும் திகழ்கிறது. பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி அளிப்பதுடன், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்து விளங்கும் தலமாக திருவாரூர் உள்ளது.
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலமாகும். இந்த சிறப்புமிக்க கோவிலில் கடந்த மாதம் (பிப்ரவரி) 20-ந் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து நாள்தோறும் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
காலபைரவர் உற்சவம்
இதில் நேற்று காலபைரவர் உற்சவ விழா நடந்தது. இதனையொட்டி கோவிலில் இருந்து திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருடன், விநாயகர், முருகன் சாமிகளுடன் காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா காட்சி நடந்தது.
அப்போது வழி நெடுகிலும் உள்ள வீடுகளில் இருந்து பக்தர்கள் சாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கவிதா தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.