மக்கள் பயன்பாட்டுக்கு 3 ஆம்புலன்ஸ் வாகனம்: கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 அரசு ஆஸ்பத்திரிகளில் மக்கள் பயன்பாட்டுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 அரசு ஆஸ்பத்திரிகளில் மக்கள் பயன்பாட்டுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.
ஆம்புலன்ஸ்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரி, நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஒட்டநத்தம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரப்பெற்று உள்ளன. இந்த வாகனங்களை மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் பொன்இசக்கி, ஆன்புலன்சு வாகன மேலாளர் ரஞ்சித் விசுவநாத், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுனில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தடையின்றி..
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மக்கள் சேவைக்காக 2 பச்சிளம் குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இங்குபேட்டர் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ், 3 வென்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் 17 அடிப்படை வசதிகளுடைய ஆம்புலன்ஸ் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அனைத்து அவசரகால மருந்துகள் மற்றும் உபகரணங்களுடன் உயிர்காக்கும் சேவைகள் அளிக்கப்படுகிறது. தற்போது மேலும் புதிதாக 3 ஆம்புலன்சுகள் வந்து உள்ளன. இனி வரும் காலங்களில் விபத்து தாய்சேய் நலம் மற்றும் அவசர சிகிச்சைக்காக பொதுமக்கள் தங்குதடையின்றி முழுமையாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறினார்.