வீரக்குமாரசாமி கோவில் தேர் நிலை சேர்ந்தது

வீரக்குமாரசாமி கோவில் தேர் நிலை சேர்ந்தது

Update: 2022-03-03 14:50 GMT
வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் தேர் நேற்று மாலை நிலை சேர்ந்தது. 
தேர் திருவிழா
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள வீரக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரியையொட்டி தேர் திருவிழா நடைபெறும்,
அதன்படி இந்த ஆண்டு 139-வது மாசி மகா சிவராத்திரி தேர் திருவிழா கடந்த 1 ந் தேதி  இரவு 7 மணி அளவில் தேர் நிலை பெயர்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 2ந் தேதி மாலை 5 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. நேற்று மாலை 5 மணிக்கு திருத்தேர் நிலை சேர்ந்தது. 
இதில் பெரிய தேரில் வீரக்குமாரசாமியும், வீரபாகு வீற்றிருந்து அருள்பாலித்தனர். சின்ன தேரில் செல்லாண்டியம்மன் அருள்பாலித்தார் பக்தர்கள் வீரக்குமரனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்து நிலையில் சேர்த்தனர்.
தேரோட்டத்தில் கோவில் குலத்தவர்கள், முதன்மைதாரர்கள் நற்பணி மன்றத்தினர், முன்னாள் அறங்காவலர்கள், அறநிலையத்துறையினர், திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். பிறகு சுவாமி தேர்பவனி, தேவஸ்தான மண்டப கட்டளை நிகழ்ச்சி நடைபெற்றது.
மண்டப கட்டளை
அதைத்தொடர்ந்து இன்று முதல் 16 ந் தேதி வரை 11 கோவில் குலத்தவர்களின் மண்டப கட்டளை நடைபெற உள்ளது. தேர் திருவிழா ஏற்பாடுகளை கோவில் குலத்தவர்களும், முதன்மைதாரர் நற்பணி மன்றத்தினரும், இந்து சமய அறநிலையத் துறையினரும் செய்து வருகின்றனர்.
திருவிழா நாட்களில் இரவு 10 மணி வரை மட்டுமே நடை திறந்திருக்கும். கோவிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வரும் போது முக கவசம் அணிந்து வரவேண்டும். அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்று  கோவில் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேர் திருவிழாவையொட்டி வெள்ளகோவில் போலீசார் சார்பில் கோவில் வளாகத்தில் தற்காலிக புறக்காவல் நிலையம் அமைத்து ஏராளமான ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்