தூத்துக்குடி மேயர் உள்ளிட்ட 42 பதவிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) மறைமுக தேர்தல்
தூத்துக்குடி மேயர் உள்ளிட்ட 42 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடக்கிறது;
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மேயர், துணை மேயர், நகராட்சி-பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட 42 பதவிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மறைமுக தேர்தல் நடக்கிறது.
உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சிகளில் உள்ள 402 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்தது. இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டு, 402 வார்டு உறுப்பினர்களும் நேற்று முன்தினம் அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலராக பொறுப்பேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், 3 நகராட்சிகளின் தலைவர், துணைத்தலைவர், 17 பேரூராட்சிகளின் தலைவர், துணைத்தலைவர் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களை தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களுக்கான தேர்தல் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நடக்கிறது. துணைமேயர், துணைத்தலைவர் தேர்தல் மதியம் 2.30 மணிக்கு நடக்கிறது.
மேயர்
தூத்துக்குடி மாநகராட்சி மேயரை தேர்வு செய்வதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீ தலைமையில் கூட்டம் கூட்டப்படுகிறது. தொடர்ந்து தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. இதில் போட்டி இருந்தால் உடனடியாக தேர்தல் நடத்தி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். போட்டி இல்லாத பட்சத்தில் உடனடியாக மேயர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதே போன்று மதியம் 2.30 மணிக்கு மாநகராட்சி துணை மேயர் தேர்தல் நடத்தப்படுகிறது.
இன்று மேயர் பதவியேற்க உள்ளதால், மாநகராட்சி கூட்ட அரங்கம், மாநகராட்சியில் உள்ள மேயர், துணை மேயர் அறைகள் மற்றும் மேயருக்கான அங்கி, வெள்ளி செங்கோல் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
மறைமுக தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.