அரசு பள்ளி கட்டிடத்தில் திடீர் விரிசல்

கூடலூர் அருகே அரசு பள்ளி கட்டிடத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது. நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவியதால் மாணவர்கள் பீதி அடைந்தனர்.

Update: 2022-03-03 13:52 GMT
கூடலூர்

கூடலூர் அருகே அரசு பள்ளி கட்டிடத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது. நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவியதால் மாணவர்கள் பீதி அடைந்தனர்.

அரசு பள்ளி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் குங்கூர்மூலா அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 550 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வந்தனர். அங்கு பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகள் ஒரு கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள அறைகளில் நடைபெற்றது. அதன் மேல் தளத்தில் உள்ள அறைகளில் தலைமை ஆசிரியர் அலுவலகம், நூலகம் உள்ளிட்டவை செயல்பட்டது. 

திடீர் விரிசல்

இதற்கிடையில் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் திடீரென சத்தத்துடன் விரிசல் ஏற்பட்டது. இதனால் நில அதிர்வு ஏற்பட்டதாக மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பீதி அடைந்தனர். மேலும் அறைகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். 

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதை அறிந்த கூடலூர் தாசில்தார் சித்தராஜ், ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில், துணைத்தலைவர் ரெஜி மேத்யூ மற்றும் தீயணைப்பு வீரர்கள், வருவாய்த்துறையினர் விரைந்து வந்து கட்டிடத்துக்குள் இருந்த அலுவலக பதிவேடுகள், மேஜைகள், இருக்கைகள், புத்தகங்களை வெளியே எடுத்து வந்தனர்.

விடுமுறை

பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் நேரில் வந்து, விரிசல் அடைந்த கட்டிடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய் துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.  

மேலும் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை வரவழைத்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. பின்னர் விரிசல் அடைந்த கட்டிடத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. மேலும் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மதியத்துக்கு பிறகு விடுமுறை அளிக்கப்பட்டது.

ஆய்வு அறிக்கை

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதீன் கூறும்போது, விரிசல் ஏற்பட்டாலும் கட்டிடம் நல்ல நிலையில் உள்ளது. எனினும் முன்னெச்சரிக்கையாக மாணவ-மாணவிகள் வேறு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு உள்ளனர். 

பொதுப்பணித்துறை அதிகாரிகள் அய்வு அறிக்கை வழங்கிய பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு நாளை முதல் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெறும்.

மேலும் செய்திகள்