படுகாயம் அடைந்த சமையல் தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
படுகாயம் அடைந்த சமையல் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கிணத்துக்கடவு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சடையை கவுண்டன் புதூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21). சமையல் தொழிலாளி. இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மகேஸ்வரியுடன் (20) திருமணம் நடந்தது. மகேஸ்வரி 6 மாத கர்ப்பமாக இருந்தார். இந்தநிலையில் சிவராத்திரி விழா அன்று மணிகண்டனும், மகேஸ்வரியும் மோட்டார் சைக்கிளில் கோவை வந்தனர். பின்னர் சிவராத்திரி விழாவை முடித்துவிட்டு 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்கள். காலை 7 மணிஅளவில் கிணத்துக்கடவில் உள்ள மேம்பாலத்தில் 2 பேரும் சென்றபோது திடீரென்று நிலைதடுமாறி மேம்பாலத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மகேஸ்வரியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த மணிகண்டனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.