போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளில் கத்தியுடன் வந்த வாலிபர் கைது
போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளில் கத்தியுடன் வந்த வாலிபர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.;
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). இவர், நேற்று பகலில் மோட்டார் சைக்கிளில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ள வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் வந்து கொண்டிருந்தார். அந்த சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த கார்த்திக், திடீரென்று நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
கமிஷனர் அலுவலக வாசலில் இந்த சம்பவம் நடந்தது. கீழே விழுந்த கார்த்திக்கை, காவலுக்கு நின்றிருந்த போலீசார் தூக்கிவிட்டனர். அப்போது கார்த்திக்கின் இடுப்பில் சிறிய அளவிலான பட்டாக்கத்தி ஒன்று இருந்தது. கத்தியை பார்த்த போலீசார், கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினார்கள். கார்த்திக், போலீசாரை கீழே தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றார்.
அவரை போலீசார் விரட்டிச் சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசாரும், பொதுமக்களும் வாலிபர் கார்த்திக்கை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. பாதுகாப்புக்காக கத்தி வைத்திருந்ததாக போலீஸ் விசாரணையில் கார்த்திக் தெரிவித்தார். வேப்பேரி போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.