977 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
குமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளின் கவுன்சிலர்கள் 977 பேர் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். 2 பேர் மட்டும் பதவியேற்கவில்லை.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளின் கவுன்சிலர்கள் 977 பேர் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். 2 பேர் மட்டும் பதவியேற்கவில்லை.
மாநகராட்சியில் பதவி ஏற்பு
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கான பதவி ஏற்பு விழா நேற்று அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்றது. இதேபோல குமரி மாவட்டத்திலும் நேற்று நடந்தது.
நாகர்கோவில் மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 52 கவுன்சிலர்களுக்கான பதவி ஏற்பு விழா நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட மண்டபத்தில் நடந்தது. இதையொட்டி அங்கு தனித்தனி இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் கவுன்சிலர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். கவுன்சிலர்களுக்கு பின்னால் கவுன்சிலர்களின் உறவினர்கள், ஆதரவாளர்கள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர்.
51 கவுன்சிலர்கள்
காலை 10.10 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடங்கியது. ஆணையர் ஆஷா அஜித், ஒவ்வொரு கவுன்சிலருக்கும் தனித்தனியாக பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலாவது வார்டில் இருந்து வரிசையாக கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. 36-வது வார்டு பா.ஜனதா கவுன்சிலர் ரமேஷ் மட்டும் நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவுக்கு வரவில்லை. அவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றைய பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும், இன்று (வியாழக்கிழமை) அவர் பதவி ஏற்க வருவதாகவும் அதிகாரிகளால் கூறப்பட்டது. இதனால் தி.மு.க. கவுன்சிலர் வக்கீல் மகேஷ், பா.ஜனதா கவுன்சிலர் மீனாதேவ், அ.தி.மு.க. கவுன்சிலர்ஸ்ரீலிஜா உள்பட 51 கவுன்சிலர்கள் மட்டும் நேற்று பதவி ஏற்றனர். காலை 11.15 மணிக்கு பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நிறைவடைந்தது.
பதவி ஏற்கும்போது கவுன்சிலர்கள் பலர் இறைவன் பெயரால் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மேலும் தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியும் தெரிவித்தனர். சில அரசியல் கட்சிகளின் கவுன்சிலர்கள் கட்சி நிர்வாகிகளை வாழ்த்தி கோஷமும் எழுப்பினர். பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியை அனைவரும் கண்டுகளிக்க ஏதுவாக மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு அகன்ற திரை மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால் அங்கு ஏராளமானோர் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி முடிந்த பிறகு தி.மு.க. கவுன்சிலர்கள் பலர் சொகுசு வேன்களில் புறப்பட்டு சென்றனர்.
நகராட்சிகள்- பேரூராட்சிகள்
இதேபோல் கொல்லங்கோடு நகராட்சியில் 33 கவுன்சிலர்களும், குழித்துறை நகராட்சியில் 21 கவுன்சிலர்களும், பத்மநாபபுரம் நகராட்சியில் 21 கவுன்சிலர்களும், குளச்சல் நகராட்சியில் 24 கவுன்சிலர்களும் அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் நடந்த பதவி ஏற்பு விழாக்களில் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அந்தந்த நகராட்சி ஆணையர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
மாவட்டம் முழுவதும் 51 பேரூராட்சி அலுவலகங்களிலும் பதவி ஏற்பு விழா நடந்தது. இதில் மருங்கூர் பேரூராட்சியில் உடல்நலக் குறைவு காரணமாக ஒருவர் மட்டும் பதவி ஏற்கவில்லை. இதனால் பேரூராட்சிகளில் 827 கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். மொத்தத்தில் மாவட்டம் முழுவதும் 977 கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
மறைமுக தேர்தல்
நாளை (வெள்ளிக்கிழமை) காலை மாநகராட்சி மேயர், நகராட்சிகளின் தலைவர்கள், பேரூராட்சிகளின் தலைவர்களுக்கான மறைமுக தேர்தலும், பிற்பகலில் மாநகராட்சி துணை மேயர், நகராட்சிகளின் துணைத்தலைவர்கள், பேரூராட்சிகளின் துணைத்தலைவர்கள் ஆகியோருக்கான மறைமுக தேர்தலும் நடைபெறுகிறது.