கட்டிடத்தை அதிகாரிகள் கையகப்படுத்தினர்
தஞ்சை திலகர் திடல் அருகே 4 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு கொண்ட கட்டிடத்தை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கையகப்படுத்தினர்.
தஞ்சாவூர்;
தஞ்சை திலகர் திடல் அருகே 4 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு கொண்ட கட்டிடத்தை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கையகப்படுத்தினர்.
குத்தகைக்கு விடப்பட்ட கட்டிடம்
தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சொந்தமான 4 ஆயிரம் சதுரஅடி இடம் கட்டிட வசதியுடன் தஞ்சை திலகர் திடல் அருகே உள்ளது. இந்த இடம் 3 ஆண்டுகள் குத்தகைக்கு தஞ்சையை சேர்ந்த ஒருவருக்கு விடப்பட்டு இருந்தது. குத்தகை காலம் கடந்த மாதம் 28-ந் தேதியுடன் முடிவடைந்தது. இருந்தாலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே குத்தகை காலம் முடிவடைந்தவுடன் இடத்தை ஒப்படைக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால் குத்தகை காலம் முடிந்த பிறகும் இடத்தை ஒப்படைக்கவில்லை.
இதனால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம், ஒன்றியக்குழு துணைத் தலைவர் அருளானந்தசாமி மற்றும் கேசவன் ஆகியோர் போலீசாருடன் நேற்றுபிற்பகல் அந்த கட்டிடத்திற்கு சென்றனர். அந்த கட்டிடத்தில் மருந்தகம், கிளினிக்குகள் செயல்பட்டு வந்தன. டாக்டர்களை பார்ப்பதற்காக ஏராளமானோர் குழந்தைகளுடன் வந்து காத்து இருந்தனர். உடனே இந்த கட்டிடத்தை கையகப்படுத்த வந்து இருப்பதாகவும், இன்னும் 1 மணிநேரத்தில் எல்லோரும் இடத்தை காலி செய்ய வேண்டும் எனவும் டாக்டர்களிடம் தெரிவித்தனர்.
எதிர்ப்பு
இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக வந்திருந்த குழந்தைகள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து டாக்டர்களும் அறையை காலி செய்தனர். பின்னர் முதலில் மருந்தகம் பூட்டப்பட்டது பின்னர் கிளினிக்குகள் செயல்பட்டு வந்த அறைகளை அதிகாரிகள் பூட்ட முயற்சி செய்தனர். அப்போது இந்த கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்தவரின் மகன் வந்து எதிர்ப்பு தெரிவித்தார்.
கட்டிடத்தை கையகப்படுத்துவதற்கான உத்தரவு எங்கே இருக்கிறது? என அவர் கேள்வி எழுப்பினர். உடனே இதை பற்றி கேள்வி கேட்க நீங்கள் யார்? உங்களிடம் எந்த உத்தரவையும் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவர், அறைகளை பூட்டுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகளுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இந்த இடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சொந்தமான இடம். இந்த இடத்தை விட்டு வெளியே போகும்படி அதிகாரிகள் கூறினர். ஆனால் இடத்தை காலி செய்ய முடியாது என அந்த நபர் பிடிவாதம் செய்தார்.
போலீசார் வருகை
இதைத்தொடர்ந்து போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். உடனே மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அங்கிருந்து வெளியே அழைத்து வந்தனர். உங்களிடம் ஆவணம் எதுவும் இருந்தால் அதிகாரிகளிடம் சென்று காண்பிக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். பின்னர் அந்த அறைகள் பூட்டப்பட்டு, 4 ஆயிரம் சதுரஅடி இடத்தை அதிகாரிகள் கையகப்படுத்தினர். மேலும் கதவுகளில் அறிவிப்பு பேனரை கட்டினர்.
அதில், இந்த இடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமானது. அந்நியர்கள் யாரும் உள்ளே வர அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த கட்டிடத்தில் கிளினிக்குகள் நடத்தி வந்த டாக்டர்கள், எங்களது மருத்துவ கருவிகள் மற்றும் பொருட்கள் எல்லாம் உள்ளே இருக்கிறது. அதை எப்படி எடுக்க முடியும் என அதிகாரிகளிடம் கேட்டனர்.
புதிய கட்டிடம் கட்ட முடிவு
அதற்கு நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு சொந்தமான பொருட்களை எடுத்து கொள்ளலாம். எப்போது எடுக்க போகிறீர்கள் என எங்களுக்கு தகவல் தெரிவித்தால் அறைகளை திறந்துவிடுவோம் என பதில் அளித்தனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூறும்போது, தற்போது உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்து இருக்கிறோம்.
அதனால் தற்காலிகமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட கட்டிடம் தேவைப்படுகிறது. தற்போது கையகப்படுத்தப்பட்டுள்ள கட்டிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சொந்தமானது. இங்கே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக செயல்பட இருக்கிறது. எங்களுக்கு தேவைப்படுவதால் கட்டிடத்தை கையகப்படுத்தி உள்ளோம் என்றனர்.