உக்ரைனில் இருந்து நவீன் உடலை இந்தியா கொண்டுவர அரசு தீவிர முயற்சி
உக்ரைனில் வெடிகுண்டு தாக்குதலில் பலியான நவீனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உச்சகட்ட போருக்கு மத்தியிலும் கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஹாவேரி: உக்ரைனில் வெடிகுண்டு தாக்குதலில் பலியான நவீனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உச்சகட்ட போருக்கு மத்தியிலும் கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஹாவேரி மாணவர் சாவு
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது கடந்த 24-ந்தேதி முதல் ரஷியா போர் தொடுத்து வருகிறது.இந்த 2 நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வந்தாலும் போரும் உச்சக்கட்டம் அடைந்து உள்ளது. இந்த போர் காரணமாக உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்புக்காக சென்ற 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்பட இந்தியர்கள் பரிதவித்து வருகின்றனர். அவர்களை ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் சிறப்பு விமானங்களை இயக்கி மத்திய அரசு மீட்டு வருகிறது. அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்கள் பதுங்கு குழிகளில் தங்கி இருந்து தங்களது உயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 6-வது நாள் நடந்த போரின் போது ரஷிய படையின் குண்டுவீச்சில் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சலகேரியை சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவர் உயிரிழந்து விட்டார். அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளது. நவீன் இறந்த செய்தி அறிந்ததும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் சோகத்திலும் மூழ்கி உள்ளனர்.
நேற்று முன்தினம் நவீனின் தந்தை சேகர கவுடாவை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி, பசவராஜ் பொம்மை, மந்திரிகள் பேசி ஆறுதல் கூறினர். இந்த நிலையில் நேற்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, மந்திரி சிவராம் ஹெப்பார் ஆகியோர் நவீனின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
உடலை கொண்டு வர வேண்டும்
மேலும் நவீனின் உடலை சலகேரிக்கு கொண்டு வர வேண்டும் என்றும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று நவீன் தந்தை சேகர கவுடா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
எனது மகன் இறந்த செய்தி அறிந்ததும் பிரதமர் மோடி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினர். அவர்களிடம் எனது மகனின் உடலை எப்படியாவது கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளேன்.
மேலும் உக்ரைனில் சிக்கி தவிக்கும் அனைவரையும் மீட்டு வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக மாணவர்கள் தற்போது பதுங்கு குழிகளில் தங்கி உள்ள பகுதியில் இருந்து போலந்து, ருேமனியா நாடுகள் 1,500 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் உள்ளது. பதுங்கு குழிகளில் தங்கி உள்ளவர்களால் அந்த நாடுகளுக்கு செல்ல முடியாது. இதனால் எப்படியாவது மாணவர்களை மீட்டு வர வேண்டும் என்றார்.
குடும்பத்தினர் கண்ணீர் கோரிக்கை
நவீனின் தாய் விஜயலட்சுமி, சகோதரர் ஹர்ஷா மற்றும் உறவினர்கள், குடும்பத்தினர் நவீனின் உடலை இந்தியா கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது, உக்ரைனில் நவீன் ரஷியா தாக்குதலில் உயிரிழந்துவிட்டார். இறுதியாக அவரது உடலை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். எனவே மத்திய, மாநில அரசுகள் நவீனின் உடலை இந்தியா கொண்டு வந்து எங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம் என்றனர்.
உருவப்படத்திற்கு அஞ்சலி
இந்த நிலையில் சலகேரியில் உள்ள நவீன் வீட்டின் முன்பு பந்தல் அமைக்கப்பட்டு, நாற்காலிகள் போடப்பட்டு உள்ளன. அங்கு வரும் கிராம மக்கள் உறவினர்கள் நவீனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் வீட்டின் முன்பு வைக்கப்பட்டு இருக்கும் நவீனின் உருவப்படத்திற்கு கிராம மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்கிடையே நேற்று நவீனின் வீட்டிற்கு வந்த பெண் போலீஸ் ஒருவர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் சலகேரி கிராமம் முழுவதும் 2-வது நாளாக நேற்றும் சோகமாக காட்சி அளிக்கிறது.
நேரில் ஆறுதல்
இதற்கிடையே நவீனின் வீட்டுக்கு ஹாவேரி மாவட்ட கலெக்டர் சஞ்சய் செட்டன்னவர், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி முகமது ரோஷன் ஆகியோர் நேற்று நேரில் சென்று, நவீனின் தந்தை சேகரகவுடாவுக்கு ஆறுதல் கூறினர். மேலும் நவீனின் உடலை கொண்டுவர கர்நாடக அரசின் நடவடிக்கை குறித்து விளக்கினர்.
இந்த நிைலயில், நவீன் உடலை இந்தியா கொண்டு வருவது பற்றி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வெளியுறவுத்துைற மந்திரியுடன் பேச்சு
கார்கிவ் நகரில் ரஷியாவின் தாக்குதலில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடலை கர்நாடகம் கொண்டுவருவது குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பேசுவேன். கார்கிவ் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்கும் பணியில் இந்திய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக எனக்கு தகவல் வந்துள்ளது.