கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்
தஞ்சை மாநகராட்சியில் 51 புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்று கொண்டனர். இவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தஞ்சாவூர்;
தஞ்சை மாநகராட்சியில் 51 புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்று கொண்டனர். இவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய கவுன்சிலர்கள் தேர்வு
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் ஆகிய 2 மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் ஆகிய 2 நகராட்சிகள், 20 பேரூராட்சிகளுக்கு கடந்த மாதம் 19-ந் தேதி தேர்தல் நடந்தது. இவற்றில் மொத்தம் 459 வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன.
இதில், பெருமகளூர் பேரூராட்சியில் 2 வார்டு கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும், அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் அனுசுயா மாரடைப்பால் மரணம் அடைந்ததால் அந்த வார்டின் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் 456 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, புதிய கவுன்சிலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பதவி ஏற்பு விழா
தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இவற்றில் தி.மு.க. 34 இடங்களிலும், அதன் கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி 2 இடத்திலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1 இடத்திலும் என மொத்தம் 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 7 இடங்களிலும், பா.ஜ.க., அ.ம.மு.க. தலா 1 இடத்திலும், சுயேச்சைகள் 2 இடத்திலும் வெற்றி பெற்று உள்ளது.
வெற்றி பெற்ற புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் தஞ்சை மாநகராட்சி புதிய கூட்ட அரங்கில் நேற்றுகாலை நடந்தது. விழாவுக்கு மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சரவணகுமார் முன்னிலை வகித்தார். கண்காணிப்பாளர் கிளமெண்ட் அந்தோணிராஜ் வரவேற்றார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. ஒவ்வொரு வார்டு கவுன்சிலராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். புதிய கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புகைப்படம்
புதிய கவுன்சிலர்கள் பெரும்பாலானோர் இறைவன், ஆண்டன் மீது உறுதியளித்து பதவி ஏற்றனர். சிலர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மீதும் உறுதியளித்து பதவி ஏற்றனர். 51 கவுன்சிலர்களும் பதவி ஏற்ற பிறகு அனைவரும் ஆணையருடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். பின்னர் ஒவ்வொரு கவுன்சிலரும் தங்களது குடும்பத்தினருடன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மாநகராட்சி அலுவலகத்திற்குள் கவுன்சிலர்களுடன் அவர்களது குடும்பத்தினரை மட்டும் செல்ல அனுமதித்தனர்.
கூட்ட அரங்கிற்குள் கவுன்சிலர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் கூட்ட அரங்கத்திற்கு வெளியே அமர வைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் பதவி ஏற்பு விழாவை கண்டுகளிக்கும் வகையில் அகன்ற திரையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பதவி ஏற்று கொண்டு கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்த புதிய கவுன்சிலர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள், கட்சி தொண்டர்கள் பொன்னாடை போர்த்தியும், ஆளுயர மாலை அணிவித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பதவி ஏற்பு விழாவையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.