சேலத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி-ஆடு, கோழிகளை கடித்து பக்தர்கள் பரவசம்

சேலத்தில் மாசி அமாவாசையையொட்டி நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, ஆடு, கோழிகளை கடித்து பக்தர்கள் பரவசத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

Update: 2022-03-02 21:27 GMT
சேலம்:
சேலத்தில் மாசி அமாவாசையையொட்டி நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, ஆடு, கோழிகளை கடித்து பக்தர்கள் பரவசத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
மயான கொள்ளை
மாசி மாத அமாவாசையில் நடக்கும் மயான கொள்ளை நிகழ்ச்சி சேலத்தில் மிகவும் பிரபலமானது. நேற்று சேலம் மாநகரின் பல்வேறு இடங்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காளியம்மன், பெரியாண்டிச்சியம்மன் கோவில்களில் இருந்து ஊர்வலமாக மயானங்களுக்கு செல்லும் பக்தர்கள் அங்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுவர்.
சேலம் டவுன் தேர்வீதி பெரிய அங்காளம்மன் கோவில், ஜான்சன்பேட்டை அங்காளம்மன் கோவில், வின்சென்ட் அங்காளம்மன் கோவில், நாராயண நகர் ஏரிக்கரை மற்றும் கிச்சிப்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், ஆண்டிப்பட்டியில் உள்ள அங்காளம்மன் கோவில் உள்பட மாநகரில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.
சுடுகாட்டிற்கு ஊர்வலம்
அந்த கோவில்களில் இருந்து சாமி சிலைகளை அலங்கரித்து பக்தர்கள் மேளதாளங்களுடன் ஆங்காங்கே உள்ள சுடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர் சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, சிவபெருமான் போன்ற பல்வேறு சாமிகள் போல வேடமிட்டு ஆடியவாறு சென்றனர். 
அப்போது வழிநெடுக திரளான பக்தர்கள் நின்று கொண்டு தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் சாமியாடியவாறு வந்த பக்தர்களிடம் ஆடு, கோழிகளையும், முட்டைகளையும் கொடுத்தனர். அப்போது, ஆட்டு குட்டிகளை வாங்கிய பக்தர்கள் அதை தங்கள் கழுத்தில் தூக்கி போட்டு ஆடியதோடு, ஆட்டின் குரல்வளையை கடித்து ரத்தம் குடித்ததை காணமுடிந்தது.
மண்டை ஓடு, எலும்புகள்
இன்னும் சில பக்தர்கள் கோழியை வாயில் கவ்வியபடி அதன் ரத்தத்தை குடித்தவாறு ஆடிக்கொண்டு சுடுகாட்டை நோக்கி சென்றனர். சாமியாடியவாறு வந்த பக்தர்களின் உடல் முழுவதும் ரத்தம் வடிந்தநிலையில் இருந்தது. 
மேலும், சில பக்தர்கள் சுடுகாட்டின் புதைகுழியில் கிடந்த இறந்த மனிதர்களின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் ஆகியவற்றுடன், ஆடு, கோழிகளை வாயில் கவ்வியபடி ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர். இந்த காட்சி பொதுமக்களை மெய்சிலிர்க்க வைத்தது. 
சில சிறுவர், சிறுமிகள் சிவன், பார்வதி போன்ற கடவுள் வேடமணிந்து ஊர்வலமாக வந்ததை காணமுடிந்தது. இப்படி மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்களுக்கு வழிநெடுகிலும் வீட்டில் உள்ள பொதுமக்கள் அவர்களின் காலில் தண்ணீர் ஊற்றி கழுவி வழிபட்டனர்.
ஆடு, கோழிகளை கடித்து...
சேலம் பிள்ளையார் நகர் பகுதியில் உள்ள காக்காயன் சுடுகாட்டில் நேற்று மயான கொள்ளை விழாவையொட்டி ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். 
அப்போது, பல்வேறு இடங்களில் இருந்து ஆக்ரோஷத்துடன் சாமியாடி வந்த பக்தர்கள் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு விபூதி கொடுத்து ஆசி வழங்கினர். மேலும், நோய்கள் குணமாகவும், திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் தரையில் படுத்திருந்த பக்தர்கள் மீது சாமி வேடம் அணிந்திருந்தவர்கள் ஏறி மிதித்து ஆக்ரோஷமாக சென்றனர்.
மேலும், ஜான்சன்பேட்டை, சந்தைப்பேட்டை, கன்னங்குறிச்சி, சீலநாயக்கன்பட்டி, நஞ்சப்பட்டி உள்பட மாநகரில் உள்ள 10-க்கும் மேற்பட்ட சுடுகாடுகளில் நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்