உக்ரைன் எல்லையில் 10 மணி நேரம் பரிதவித்தோம்
உணவும், தண்ணீரும் இன்றி உக்ரைன் எல்லையில் 10 மணி நேரம் பரிதவித்ததாக மீட்கப்பட்ட குமரியை சேர்ந்த 3 மாணவிகள் உருக்கமான தகவலை தெரிவித்துள்ளனர்.;
கொல்லங்கோடு:
உணவும், தண்ணீரும் இன்றி உக்ரைன் எல்லையில் 10 மணி நேரம் பரிதவித்ததாக மீட்கப்பட்ட குமரியை சேர்ந்த 3 மாணவிகள் உருக்கமான தகவலை தெரிவித்துள்ளனர்.
மாணவிகள் மீட்பு
உக்ரைன் மீது ரஷியா போர்த்தொடுத்து உக்கிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பு கருதி அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அதே சமயத்தில் மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புக்காக உக்ரைனில் தங்கியிருந்த இந்திய மாணவ, மாணவிகளும் பரிதவிக்கிறார்கள். அவர்களை விமானம் மூலம் பத்திரமாக மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையே குமரி மாவட்டம் நித்திரவிளையை சேர்ந்த ஸ்ருதி, கருங்கல்லை சேர்ந்த ஆஷிதா, களியக்காவிளையை அடுத்த குளப்புரத்தை சேர்ந்த ஆஷிகா ஆகிய 3 மாணவிகள் உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள உஷ்ரூத்தில் போருக்கு மத்தியில் பரிதவித்தது தெரிய வந்தது.
அங்குள்ள மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த அவர்கள், எப்படியாவது நாடு திரும்பி விட மாட்டோமோ? என்ற அச்சத்தில் இருந்தனர். இந்தநிலையில் குமரியை சேர்ந்த 3 மாணவிகளும், இந்திய மாணவர்களுடன் விமானம் மூலம் உக்ரைன் எல்லையில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்டனர்.
பெற்றோர் மகிழ்ச்சி
நேற்றுமுன்தினம் 3 மாணவிகளும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு அவர்களை பார்த்த மகிழ்ச்சியில் பெற்றோரும், உறவினர்களும் கட்டி தழுவி வரவேற்றனர்.
பின்னர் இரவில் அங்குள்ள உறவினர் வீடுகளில் அவர்கள் தங்கியிருந்தனர். குண்டு மழை பொழிந்த ஆபத்தான நிலையில் உக்ரைனில் இருந்து உயிர் தப்பிய திகில் அனுபவம் குறித்து கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
உணவின்றி தவித்தோம்
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் உக்ரைன் சென்றோம். அங்கு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தோம். உக்ரைன் எல்லையை கடந்தால் இந்திய விமானம் மூலம் நாடு திரும்பி விடலாம் என்ற தகவல் எங்களுக்கு வந்தது. இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் ஏற்படுத்தித்தந்த பஸ்களில் ஏறி ஹங்கேரி எல்லை வரை பயணம் செய்தோம். வரும் வழியில் ஏதும் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் இருக்க வேண்டும் என உயிரை கையில் பிடித்தபடி பயணம் செய்தோம்.
ஹங்கேரி எல்லையில் இறங்கியதும் அங்கு 10 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உண்ண உணவும், குடிக்க தண்ணீரும் இன்றி மிகவும் கஷ்டப்பட்டோம். மேலும் அந்த பகுதியில் கழிப்பறை வசதியும் இல்லாமல் இருந்ததால் நாங்கள் உள்பட அங்கிருந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டோம். பல்வேறு சிக்கலுக்கு இடையே கல்லூரி நிர்வாகம், மத்திய அரசின் முயற்சியால் நாங்கள் உடனடியாக நாடு திரும்ப முடிந்தது.
மத்திய அரசுக்கு நன்றி
அதே சமயத்தில் உக்ரைனின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை மீட்பதில் தான் மிகுந்த சிரமம் உள்ளது. எங்களை பத்திரமாக மீட்டு கொண்டு வந்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். அதேபோல் மீதமுள்ள மாணவ, மாணவிகளையும் பத்திரமாக மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.