டிராக்டர் மீது லாரி மோதி விபத்து: பெண் உள்பட 3 பேர் சாவு
தாவணகெரே அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.;
சிக்கமகளூரு: தாவணகெரே அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
டிராக்டர் மீது லாரி மோதல்
தாவணகெரே மாவட்டம் அனகோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று முன்னால் சென்ற டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் டிராக்டர் பல்டி அடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியின் முன்பகுதியும் அப்பளம் போல நொறுங்கியது.
இந்த விபத்தில் டிராக்டரில் இருந்த 4 பேரும், லாரியில் இருந்த ஒரு பெண் உள்பட 2 பேரும் என 6 பேர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள், 6 பேரையும் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாவணகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
3 பேர் சாவு
தாவணகெரே அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் டிராக்டரில் வந்தவர்களில் 2 பேரும், லாரியில் வந்த பெண்ணும் உயிரிழந்தது தெரியவந்தது.
பலியானவர்கள் தாவணகெரே அருகே ஹாலவர்த்தி கிராமத்தை சேர்ந்த அனுமந்தப்பா (வயது 40), கிரண் (34) மற்றும் நெட்டுவள்ளி கிராமத்தை சேர்ந்த அன்னப்பூர்ணா (30) என்பது தெரியவந்தது. மேலும் டிராக்டரில் வந்த பசவராஜ், ரேவணசித்தப்பா மற்றும் அன்னப்பூர்ணாவின் கணவரான லாரி டிரைவர் சந்தோஷ் ஆகிய 3 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பெங்களூருவை சுற்றிப்பார்க்க...
மேலும், நெட்டுவள்ளி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் சந்தோஷ், தாவணகெரேயில் இருந்து பெங்களூருவுக்கு தானியங்கள் ஏற்றி சென்றார். அப்போது, அவருடைய மனைவி அன்னப்பூர்ணா, பெங்களூருவை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இதனால் சந்தோஷ், மனைவி அன்னப்பூர்ணாவை லாரியில் அழைத்து கொண்டு பெங்களூரு நோக்கி சென்றபோது, விபத்தில் சிக்கியது தெரியவந்தது.
இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தாவணகெரே புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான லாரி மற்றும் டிராக்டரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து தாவணகெரே புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.