ஆலயங்களில் சிறப்பு திருப்பலி

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதை தொடர்ந்து கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.

Update: 2022-03-02 21:06 GMT
தஞ்சாவூர்;
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதை தொடர்ந்து கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
தவக்காலம் தொடக்கம்
கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை ஒன்றாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுவதை கொண்டாடும் வகையில் உயிர்ப்பு பெருவிழாவாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஈஸ்டர் பெருவிழாவுக்கு முந்தைய 40 நாட்களை தவக்காலமாக அவர்கள் கடைபிடிக்கின்றனர். தவக்காலத்தின் முதல் நாள் சாம்பல் புதன்கிழமையாக அனுசரிக்கப்படும். இந்த ஆண்டிற்கான தவக்காலம் நேற்று சாம்பல் புதனுடன் தொடங்கியது.
சிறப்பு திருப்பலி
தவக்காலத்தின் தொடக்கநாளான நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடந்தது. தலைமை ஆயர் ஜேம்ஸ்பால் தலைமை தாங்கினார். இதில் உதவி ஆயர் ஜெபராஜ் மற்றும் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். ஒவ்வொரு புதன்கிழமையும் மாலை 6.30 மணிக்கு ஆராதனை நடக்கிறது. தவக்காலத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமையில் சிறப்பு கூட்டம் நடக்கிறது.
கோட்டை கிறிஸ்துநாதர் ஆலயம்
தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் பிரைட் பிராங்கிளின் தலைமையில் சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை நேற்றுமாலை 6.30 மணிக்கு நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தவக்காலத்தில் தினமும் காலை 7 மணிக்கு திருவிருந்து ஆராதனை நடைபெறுகிறது.
தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள திருஇருதய பேராலயத்தில் சாம்பல் புதன் வழிபாடு பேராலய பங்கு தந்தை பிரபாகரன் அடிகளார் தலைமையில் நடந்தது. அப்போது அவர், கடந்த ஆண்டு குருத்தோலை திருநாளின்போது வழங்கப்பட்ட குருத்தோலைகளை எரித்து அதில் இருந்து கிடைத்த சாம்பல் புனிதப்படுத்தப்பட்டு கிறிஸ்தவர்களின் நெற்றியில் சிலுவை அடையாளத்துடன் பூசினார். தொடர்ந்து காலை, மாலையில் திருப்பலி நடந்தது.
அடைக்கலமாதா ஆலயம்
தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள அடைக்கலமாதா ஆலயத்தில் பங்குதந்தை ஜெயராஜ் அடிகளார் தலைமையில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதேபோல் குழந்தை ஏசு திருத்தலம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடந்தது.
பூண்டி மாதா பேராலயம்
தஞ்சை அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நேற்று நிறைவேற்றப்பட்டது.  சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியை பேராலய அதிபர் பாக்கிய சாமி, துணை அதிபர் ரூபன் அந்தோணிசாமி, தியான மைய இயக்குனர் சாம்சன், உதவி பங்குத்தந்தையர் நிறைவேற்றினார்கள். திருப்பலியில் புனிதம் செய்யப்பட்ட சாம்பலை திருப்பலியில் கலந்து கொண்ட பக்தர்களின் நெற்றியில் பூசினர். இதைப்போல திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேவாலய ங்களிலும் சாம்பல் புதன் திருப்பலி நடைபெற்றது.

மேலும் செய்திகள்