வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியை முன்னிட்டு மயானக்கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக காளி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில,் காளி வேடம் அணிந்தவர்கள் பக்தர்களை முறத்தால் அடித்தனர். காளியிடம் முறத்தால் அடி வாங்கினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் மண்டியிட்டு காளியிடம் முறத்தால் அடி வாங்கினர்.
மயான சூறை
அதனைத்தொடர்ந்து அங்காயி வேடம் அணிந்தவர் ஆட்டுக் குடலை மாலையாக அணிந்து ஊர்வலமாக வந்தார். பின்னர், அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்தில் ஆடு, கோழி பலியிடப்பட்டு அதன் ரத்தத்தில் சாதத்தை கலந்து வானத்தில் வீசி மயான சூறை நிகழ்ச்சி நடந்தது. அப்போது குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மடியேந்தி சாதத்தை வாங்கி அதனை சாப்பிட்டனர். திருவிழாவில் அரும்பாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.