இலவச சீருடை உற்பத்தி பணிகள் விரைவில் தொடக்கம்

2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான இலவச சீருடை உற்பத்தி பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

Update: 2022-03-02 20:35 GMT
2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான இலவச சீருடை உற்பத்தி பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
விலையில்லா வேட்டி-சேலை
தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா வேட்டி சேலை வழங்கப்படுகிறது. மேலும் பள்ளிக்கூட மாணவ -மாணவிகளுக்கு இலவச சீருடைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் 1 கோடியே 82 லட்சத்து 21 ஆயிரம் சேலைகளும், 1 கோடியே 81 லட்சத்து 89 ஆயிரம் வேட்டிகளும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது 1 கோடியே 73 லட்சத்து 30 ஆயிரம் சேலைகளும், 1 கோடியே 79 லட்சத்து 71 ஆயிரம் வேட்டிகளும் உற்பத்தி செய்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 45 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 18 ஆயிரத்து 500 விசைத்தறிகளில் விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி நடைபெற்றது.
பள்ளிக்கூட சீருடை
இதன் மூலம் 3 ஆயிரத்து 700 நெசவாளர்கள் பயனடைந்தனர். 2022-ம் ஆண்டு விலையில்லா வேட்டி, சேலை திட்ட உற்பத்தி தொடக்கத்தின் போது நூல் விலை கடுமையாக உயர்ந்த போதிலும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஆகியோரின் முயற்சியால் உரிய நேரத்தில் நூல் கொள்முதல் செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு தற்போது உற்பத்தி முடிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிக்கூட சீருடை உற்பத்தி தொடங்க உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 98 லட்சம் மீட்டர் ‘டிரில்’ துணிகளும், 73 லட்சம் மீட்டர் ‘கேஸ்மெட்’ துணிகளும் 213 லட்சம் மீட்டர் ‘சர்ட்டிங்’ துணிகளும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு சீருடை உற்பத்தி செய்வதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தொடர் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளதால் நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்