ரூ.1¼ கோடி மோசடி வழக்கில் மின்வாரிய உதவி பொறியாளர் மனைவியுடன் கைது
முதலீட்டு தொகைக்கு அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசைகாட்டி ரூ.1¼ கோடி மோசடி செய்ததாக மின்வாரிய உதவி பொறியாளர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்;
ிவகங்கை
முதலீட்டு தொகைக்கு அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசைகாட்டி ரூ. 1¼ கோடி மோசடி செய்ததாக மின்வாரிய உதவி பொறியாளர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
அதிக பணம் தருவதாக....
சிவகங்கை காஞ்சிரங்காலை அடுத்துள்ள தெனாலி வயல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் முனியாண்டி. இவரது மனைவி விஜயலட்சுமி.
கிருஷ்ணன் முனியாண்டி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊருக்கு வந்து விட்டார் .இந்த நிலையில் கடந்த ஆண்டு தஞ்சாவூரை சேர்ந்த பிரபு என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ இவர்களுக்கு அறிமுகமானார்.
அவர் தஞ்சாவூரைச் சேர்ந்த நவபாரதி மற்றும் அவரது கணவர் செந்தில்குமார் ஆகியோரை விஜயலட்சுமிக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் கிருஷ்ணன் முனியாண்டி, அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோரை சந்தித்த செந்தில்குமார், அமுதசுரபி என்ற திட்டத்தில் முதலீடு செய்தால் அதிகம் பணம் கிடைக்கும். பணத்தை வங்கி கணக்கு மூலம் செலுத்துங்கள் என்று கூறினார்.
கைது
இதை நம்பி கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை உள்ள காலத்தில் நவ பாரதி உள்ளிட்ட சிலரது கணக்குகளுக்கு ரூ.1 கோடியே 29 லட்சத்து 35 ஆயிரத்தை விஜயலட்சுமி அனுப்பியுள்ளார். பணத்தை பெற்று கொண்ட செந்தில்குமார் மற்றும் நவபாரதி ஆகியோர் ரூ.8 லட்சத்து 74 ஆயிரம் மட்டுமே திரும்ப கொடுத்துள்ளனர். மீதி தொகை ரூ.1 கோடியே 20 லட்சத்து 61 ஆயிரத்தை திருப்பி தரவில்லையாம்
இதுகுறித்து விஜயலட்சுமி, சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மைக்கேல் ராஜ், செந்தாமரைஆகியோர் விசாரணை நடத்தி தஞ்சாவூரை சேர்ந்த நவபாரதி(45), செந்தில்குமார் (48), ஜெயஸ்ரீ, தேவி, கரிகாலன், உமாதேவி, பிரியங்கா, மரகதவல்லி, அனிதாஸ், சக்திஸ்ரீ, வெங்கடேஷ், அதிராமபட்டினத்தை சேர்ந்த வெண்ணிலா, கீதா, மாணிக்கம், வித்யா, சுந்தர் உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் நவபாரதி மற்றும் அவரது கணவர் செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான செந்தில்குமார் தஞ்சாவூரில் மின்வாரிய உதவி பொறியாளராக வேலை பார்த்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.