கரூர் மாவட்டத்தில் 8 பேரூராட்சிகளை சேர்ந்த 123 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
கரூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளை சேர்ந்த 123 கவுன்சிலர்கள் நேற்று பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.;
கரூர்,
8 பேரூராட்சிகள்
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம், மருதூர், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், புஞ்சை தோட்டக்குறிச்சியில் தலா 15 வார்டுகளும், நங்கவரம் பேரூராட்சியில் 18 வார்டுகளும் உள்ளன. இந்த வார்டுகளை கைப்பற்ற தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும், அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் முடிவு வெளியானது. இதில் 8 பேரூராட்சிகளில் உள்ள பெரும்பான்மையான வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியது.
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் 4,915 ஆண்களும், 5,469 பெண்களும் என மொத்தம் 10 ஆயிரத்து 384 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் பதவி பெண் (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 10 வார்டுகளில் தி.மு.க.வும், 2 வார்டுகளில் அ.தி.மு.க.வும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் சுயேச்சை வேட்பாளர் தலா ஒரு வார்டில் வெற்றி பெற்றனர். இதன் மூலம் அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.இந்தநிலையில் அரவக்குறிச்சி பேரூராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நேற்று பேரூராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் 15 கவுன்சிலர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புலியூர்
புலியூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12 தி.மு.க., பா.ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு, சுயேச்சை வேட்பாளர் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதையடுத்து, வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பேரூராட்சி கூட்ட அரங்கில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
உப்பிடமங்கலம்
உப்பிடமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 15-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றார். இதனைதொடர்ந்து 14 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், 13 வார்டுகளை தி.மு.க.வும், ஒரு வார்டில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனர். இந்தநிலையில் சுயேச்சை வேட்பாளரும் தி.மு.க.வில் இணைந்தார். இதனால் எதிர்க்கட்சிகளே இல்லாமல் 15 வார்டுகளும் தி.மு.க. வசமானது.
உப்பிடமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தி.மு.க.வை சேர்ந்த 15 கவுன்சிலர்களுக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் பானு ஜெயராணி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 14 வார்டுகளையும், அ.தி.மு.க. 1 வார்டையும் கைப்பற்றியது. இதையடுத்து, வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகவடிவேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மருதூர்
மருதூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 13 வார்டுகளை தி.மு.க.வும், அ.தி.மு.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். இதையடுத்து, வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான ராஜகோபால் 15 கவுன்சிலர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம்
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 12 வார்டுகளையும், அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பா.ஜனதா தலா ஒரு வார்டையும் கைப்பற்றின. இதையடுத்து, வெற்றி பெற்ற 15 கவுன்சிலர்களுக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் குமாரவேலன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நங்கவரம்
நங்கவரம் பேரூராட்சியில் தி.மு.க. சார்பில் 15 பேரும், அ.தி.மு.க. சார்பில் 18 பேரும், பா.ஜனதா சார்பில் 6 பேரும், பா.ம.க., கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., காங்கிரஸ் சார்பில் தலா 1 பேரும், சுயேச்சை வேட்பாளர்கள் 12 பேர் என மொத்தம் 55 பேர் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 15 கவுன்சிலர்களும் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க. சார்பில் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 2 பேரும் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு நங்கவரம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் வேல்முருகன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புஞ்சை தோட்டக்குறிச்சி
புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. சார்பில் 14 பேரும், அ.தி.மு.க. சார்பில் 13 பேரும், பா.ஜனதா, பா.ம.க. சார்பில் 2 பேரும், சுயேச்சைகள் 6 பேரும் போட்டியிட்டனர். இதில், தி.மு.க. 12 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். இதையடுத்து, வெற்றி பெற்ற 15 வார்டு கவுன்சிலர்களும் பேரூராட்சி கூட்ட அரங்கில் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் இளங்கோ, கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.