கடலூர் மாநகராட்சியில் 45 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

புதிதாக உருவான கடலூர் மாநகராட்சியில் 45 வார்டு கவுன்சிலர்களும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து மேயர் மற்றும் துணை மேயருக்கான மறைமுக தேர்தல் நாளை நடக்கிறது.

Update: 2022-03-02 18:37 GMT

கடலூர் மாநகராட்சி

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடந்தது. இதில் வெற்றி பெற்ற பேரூராட்சி கவுன்சிலர்கள் நேற்று பதவிஏற்றுக்கொண்டனர். அந்த வகையில் நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்ந்த கடலூர் மாநகராட்சியை பொறுத்தவரை 45 வார்டுகளில் 27 வார்டுகளை தி.மு.க.வும், 6 வார்டுகளை அ.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 வார்டுகளையும், தமிழக வாழ்வுரிமை கட்சி 3 வார்டுகளையும், பா.ம.க., பா.ஜ.க, காங்கிரஸ் தலா ஒரு வார்டுகளிலும், 3 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். இதில் 2 சுயேச்சைகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

இதையடுத்து 45 வார்டு கவுன்சிலர்களும் பதவி ஏற்பு விழா மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்காக அலுவலக வளாகத்தில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து 45 வார்டு கவுன்சிலர்களுக்கும் ஆணையாளர் விஸ்வநாதன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவுக்காக மாநகராட்சி கவுன்சிலர்கள், அவர்களின் குடும்பத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்களும் வந்திருந்தனர்.

மறைமுக தேர்தல்

இதையடுத்து பதவி ஏற்ற வார்டு கவுன்சிலர்கள் தங்களின் மேயர், துணை மேயைரை  தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. போட்டி இருந்தால் தேர்தலும், போட்டி இல்லை என்றால் ஒருமனமாகவும் தலைவர், துணை தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பதவி ஏற்பு விழாவையொட்டி மாநகராட்சி  அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்