புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளில் 105 வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளில் 105 வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்.

Update: 2022-03-02 18:36 GMT
கறம்பக்குடி:
கவுன்சிலர்கள் பதவியேற்பு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ந் தேதியும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளில் 105 வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா அந்தந்த பேரூராட்சி அலுவலக வளாகங்களில் நேற்று நடைபெற்றது. 
கறம்பக்குடி, ஆலங்குடி 
கறம்பக்குடி பேரூராட்சியில் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 10 பேர், காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர், அ.தி.மு.க.வை சேர்ந்த 2 பேர் மற்றும் 2 சுயேச்சைகள் என மொத்தம் 15 பேரும் பேரூராட்சி கவுன்சிலர்களாக பொறுப்பேற்று கொண்டனர். பேரூராட்சி நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஆலங்குடி பேரூராட்சியில் தி.மு.க.சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 9 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேரும், சுயேச்சை கவுன்சிலர்கள் 4 பேரும் என மொத்தம் 15 பேருக்கு செயல் அலுவலர் பூவேந்திரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பொன்னமராவதி, கீரமங்கலம் 
பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் தி.மு.க. சார்பில், வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 10 ேபர், காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேரும், சுயேச்சை கவுன்சிலர் ஒருவரும் என மொத்தம் 15 பேர் தேர்தல் நடத்தும் அதிகாரி மு.செ.கணேசன் முன்னிலையில் உறுதி மொழியுடன் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
கீரமங்கலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 13 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி கட்சியினரும், 2 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருந்த நிலையில் நேற்று பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் அலுவலருமான செந்தில்குமார் முன்னிலையில் அனைவரும் பதவி ஏற்று கொண்டனர். இதில் 6-வது வார்டில் தி.மு.க.வை சேர்ந்தவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
கீரனூர், அரிமளம் 
கீரனூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளில் தி.மு.க. கவுன்சிலர்களும், அ.ம.மு.க. கவுன்சிலர் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் ஒருவரும், சுயேச்சை கவுன்சிலர் ஒருவரும் என மொத்தம் 15 பேரும் தேர்தல் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான சின்னச்சாமி முன்னிலையில் பதவி ஏற்று கொண்டு உறுதிமொழியை எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் சின்னத்துரை எம்.எல்.ஏ. உள்பட அரசியல் கட்சியினர்  பலர் கலந்து கொண்டனர். 
அரிமளம் பேரூராட்சியில் தி.மு.க.சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 9 பேரும், காங்கிரஸ் கவுன்சிலர்கள் 2 பேரும், தே.மு.தி.க. கவுன்சிலர்கள் 2 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவரும், சுயேச்சை ஒருவரும் என மொத்தம் 15 பேரும் பேரூராட்சி கவுன்சிலர்களாக பொறுப்பேற்று கொண்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இலுப்பூர்
இலுப்பூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 7 வார்டுகளில் தி.மு.க.வும், 3 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 5 வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றிருந்தனர். வெற்றி பெற்ற 15 வார்டு கவுன்சிலர்களும் பதவி ஏற்பு, உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான ஆஷாராணி தலைமையில் 15 வார்டு கவுன்சிலர்களும் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராமகிருஷ்ணன், முருகன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் 5-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரூராட்சிகளில் தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற உள்ளது. 

மேலும் செய்திகள்