வேலூர் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 60 கவுன்சிலர்கள் உற்சாகத்துடன் பதவியேற்றனர்
வேலூர் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 60 கவுன்சிலர்கள் உற்சாகத்துடன் பதவியேற்றனர்.
வேலூர்
வேலூர் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 60 கவுன்சிலர்கள் உற்சாகத்துடன் பதவியேற்றனர்.
பதவியேற்பு விழா
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கடந்த 22-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் தி.மு.க. அதிக இடங்களை வென்றது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கவுன்சிலர்களாக பதவியேற்கும் நிகழ்ச்சி அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் நேற்று நடந்தது.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 44 வார்டுகளில் தி.மு.க. வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க.7 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 6 இடங்களிலும், பா.ம.க., பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கான பதவியேற்பு விழா மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதனையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
புதுப்பொலிவுடன் மாநகராட்சி அலுவலகம் காட்சி அளித்தது. பதவியேற்பு விழாவுக்கு மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் வந்திருந்தனர். இதனால் மாநகராட்சி கூட்ட அரங்கு நிரம்பிவழிந்தது
வரிசையாக...
வேலூர் மாநகராட்சியில் பெண் கவுன்சிலர்கள் அதிகமாக உள்ளதால் பெண்கள் ஒருபுறமும், ஆண்கள் ஒரு புறமும் வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்தனர். 1-வது வார்டு முதல், வரிசையாக கவுன்சிலர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க. கவுன்சிலர்கள் பதவி ஏற்கும்போது முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சியின் பிற பொறுப்புகளில் உள்ள பிரமுகர்கள் பெயரை கூறியும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பெயரிலும், பா.ம.க., பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர்கள் தங்கள் கட்சியின் தலைவர்கள் பெயரை கூறியும் உற்சாகத்துடன் பதவி ஏற்றுக்கொண்டனர்.
சலசலப்பு
பதவியேற்பு விழா நடந்த அரங்கத்திற்குள் அனைவரும் செல்ல முடியாது என்பதால் மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே பந்தல் அமைக்கப்பட்டு 2 இடங்களில் பெரிய திரைகளில் பதவியேற்பு விழா நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இதன்மூலம் வெளியே இருந்தவர்கள் பதவியேற்பு விழாவை கண்டு களித்தனர். மேலும் பதவி ஏற்பு விழா நடந்த கூட்ட அரங்கில் அரசியல் கட்சியினர் ஏராளமானோர் குவிந்தனர்.
இதனால் அரங்கம் முழுவதும் சலசலப்பு கேட்டுக்கொண்டே இருந்தது. இந்த சத்தத்திற்கு இடையில் கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இருமுறை திடீரென மின்தடை ஏற்பட்டது. பின்னர் உடனடியாக சரிசெய்யப்பட்டது.
பெண் கவுன்சிலர்கள் பதவி ஏற்கும்போது தங்களது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்று பதவி ஏற்றுக் கொண்டனர். கவுன்சிலர்கள் சிலர் மாநகராட்சி கூட்ட அரங்கில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். கவுன்சிலர்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் மாநகராட்சி அலுவலகம் வந்து வாழ்த்து தெரிவித்தனர். இதனால் மாநகராட்சி அலுவலகம் திருவிழா கூட்டம்போல கோலாகலமாக காட்சி அளித்தது.
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மற்றும் துணை மேயர் அறைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. 4-ந் தேதி அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
உறுதிமொழியை வாசிக்க திணறிய கவுன்சிலர்கள்
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு நேற்று பதவியேற்பு விழா நடந்தது. இதில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டு பதவியேற்றுக் கொண்டனர். உறுதிமொழி எடுக்கும்போது சில கவுன்சிலர்கள் அதை வாசிக்க திணறினர்.
உறுதிமொழியில் குறிப்பிடப்பட்டிருந்த சில வார்த்தைகளை அவர்கள் வாசிக்க சிரமப்பட்டனர். அப்போது ‘சட்டம்’ என்ற வார்த்தையை சில கவுன்சிலர்கள் சட்டை என்றே வாசித்தனர். இதனால் கூட்டரங்கில் சிரிப்பலை எழுந்தது. சில கவுன்சிலர்கள் கமிஷனர் உறுதிமொழியை வாசிக்க அதை கேட்டு அவர்கள் திருப்பி கூறி பதவியேற்றனர்.