பொதுமக்கள் சாலை மறியல்

ஈமக்கிரியை மண்டபம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-03-02 18:17 GMT
மயிலாடுதுறை:
ஈமக்கிரியை மண்டபம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் ஊராட்சி மஞ்சள் வாய்க்கால் கரை பகுதியில் மாவட்ட ஊராட்சி நிதி ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் ஈமக்கிரியை மண்டபம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த பணியை ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி தனது சுயலாபத்திற்காக தடுத்து நிறுத்தியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சு வார்த்தை
தகவலறிந்து வந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் போக்குவரத்திற்கு இடையூறு இன்றி ஓரமாக நின்று போராட்டம் நடத்தும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் பொதுமக்கள் தங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை சாலை மறியல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என பதிலளித்தனர். இதனையடுத்து போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்த முயற்சித்தனர்.
அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. ஆனாலும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய ஆணையர் அன்பரசன் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 
போக்குவரத்து பாதிப்பு
சாலை மறியல் போராட்டத்தில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் இடும்பையன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டமங்கலம் மஞ்சள் வாய்க்கால் கரை பகுதியில் ஈமக்கிரியை மண்டபம் கட்டக்கூடாது என்றும், அங்கு ஈமக்கிரியை மண்டபம் கட்ட முயற்சி செய்யும் ஒன்றிய குழு உறுப்பினர் அபிராமி வெங்கடேசன் என்பவரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்