மயிலாடுதுறை சீர்காழி நகரசபை கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகரசபை கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆணையர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
மயிலாடுதுறை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகரசபை கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆணையர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
நகரசபை கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 19-ந் தேதி தமிழகம் முழுவதும் தேர்தல் நடந்தது. அதன்படி மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் 19-வது வார்டு நகரசபை கவுன்சிலர் பதவிக்காக போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் அன்னதாட்சி என்பவர் இறந்து விட்டார். இதனையடுத்து 19-வது வார்டுக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. மீதமுள்ள 35 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தன. தொடர்ந்து கடந்த 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் தி.மு.க. சார்பில் 24 பேரும், அ.தி.மு.க. சார்பில் 7 பேரும், பா.ம.க. சார்பில் 2 பேரும், ம.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் சார்பில் தலா ஒருவரும் வெற்றி பெற்றனர்.
அதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் பாலு தலைமை தாங்கி வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 35 பேருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) நகரசபை தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவிகளை கைப்பற்ற தி.மு.க.விற்கு 2 அணிகளாக பிரிந்து தங்களுக்கு ஆதரவுகளை திரட்டி வருகின்றனர். நேற்று பதவி ஏற்று வெளியே வந்த பெரும்பாலான தி.மு.க. நகரசபை கவுன்சிலர்களையும், ஒருசில அ.தி.மு.க. நகரசபை கவுன்சிலர்களையும் ஒரு பிரிவை சேர்ந்த தி.மு.க. வினர் தாங்கள் கொண்டு வந்த டெம்போ வேன்களில் அவசரஅவசரமாக ஏற்றினர். அப்போது மற்றொரு பிரிவினர் தங்களுக்கு ஆதரவு திரட்ட முயற்சித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.
இதனையடுத்து நகரசபை கவுன்சிலர்கள் ஏறிய 2 டெம்போ வேன்களும் சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இதன் காரணமாக நகராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது. மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சீர்காழி
சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 133 பேர் போட்டியிட்டனர். இதில் 24 பேர் வெற்றி பெற்றனர். அதில் தி.மு.க. சார்பில் 11 பேரும், அ.தி.மு.க. சார்பில் 3 பேரும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 2 பேரும், ம.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. சார்பில் தலா 1 நபரும், சுயேச்சைகள் 6 பேரும் வெற்றி பெற்றனர். நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவில் வெற்றி பெற்ற 24 பேருக்கும் சீர்காழி நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான இப்ராஹிம் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர்கள் பதவி ஏற்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
விழாவில் மேலாளர் காதர்கான், நகர ஆய்வாளர் நாகராஜ், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் சார்லஸ், செல்லதுரை, பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.