டாப்சிலிப் பகுதியில் காயத்துடன் சுற்றி திரிந்த குட்டி யானையை மரக்கூண்டில் அடைத்து சிகிச்சை

காயத்துடன் சுற்றி திரிந்த குட்டி யானையை டாப்சிலிப் அருகே கோழிகமுத்தி முகாமில் மரக்கூண்டில் அடைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-03-02 17:47 GMT
பொள்ளாச்சி

காயத்துடன் சுற்றி திரிந்த குட்டி யானையை டாப்சிலிப் அருகே கோழிகமுத்தி முகாமில் மரக்கூண்டில் அடைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குட்டி யானை காயம்

ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் அருகே தமிழக-கேரள வனப்பகுதியையொட்டி உள்ள இடத்தில் ஒரு குட்டி பெண் யானை காயத்துடன் நின்றது. 

இதை அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று காயம் அடைந்த குட்டி யானைக்கு சிகிச்சை அளித்தனர். குட்டி யானைக்கு காலில் காயம் அதிகமாக இருந்ததலும் அதில் சீழ் வடிந்து வந்ததாலும் அதை முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து கும்கிகள் உதவியுடன் அந்த குட்டி யானையை லாரியில் ஏற்றி கோழிகமுத்தியில் உள்ள முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. 

கூண்டில் அடைத்து சிகிச்சை

மேலும் அந்த குட்டிக்கு சிகிச்சை அளிக்க வசதியாக தற்காலிக கூண்டு அமைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த கூண்டில் குட்டியை அடைத்து வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் கணேசன் மேற்பார்வையில் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையிலான குழுவினர் அந்த குட்டியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

காயம் அடைந்த குட்டி யானை  மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. யானையின் ஒரு காலில் காயம் அதிகமாக ஏற்பட்டு உள்ளதால், மற்ற 3 கால்களை மட்டும் பயன்படுத்தி சிரமத்துடன் நடந்து வருகிறது. 

தீவிர கண்காணிப்பு

காயம் ஏற்பட்டு கால்களில் போவிடோன் கரைசலுடன் சாதாரண உப்பு கலந்து சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆயுர்வேத கிருமி நாசினிகள் மற்றும் காயங்களை குணப்படுத்த மருந்துகள் தெளிக்கப்பட்டன. 

டாக்டர்களின் சிகிச்சைக்கு அந்த குட்டி நன்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து பேராசிரியர் டாக்டர் தர்மசீலன் யானையை பரிசோதித்து சிகிச்சை அளித்தார். 

மேலும் குட்டியின் உடல் நிலையை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்