ஓசூர் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 45 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

ஓசூர் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 45 கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்று கொண்டனர்.

Update: 2022-03-02 17:23 GMT
ஓசூர்:
ஓசூர் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 45 கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்று கொண்டனர்.
ஓசூர் மாநகராட்சி
ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 45 வார்டுகளுடன் முதலாவதாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. 45 வார்டுகளில், தி.மு.க. 21 வார்டுகளிலும், அ.தி.மு.க. 16 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ், பா.ஜனதா, பா.ம.க. கட்சிகளின் வேட்பாளர்கள் தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இதில் பா.ம.க. வேட்பாளரும், 4 சுயேச்சைகளும் தி.மு.க.வில் சேர்ந்து விட்டனர். மற்றொரு சுயேச்சை வேட்பாளர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஓசூர் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 5 சுயேச்சைகளும் பெண்கள் ஆவர். 
பதவி ஏற்பு
மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 45 கவுன்சிலர்களும் நேற்று பதவி ஏற்று கொண்டனர். மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆணையாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். பின்னர் கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 
வார்டு வாரியாக, ஒவ்வொரு கவுன்சிலரும் தனித்தனியாக பதவி பிரமாண உறுதிமொழி ஏற்றனர். பெரும்பாலான கவுன்சிலர்கள் கடவுளறிய, உளமார என்று குறிப்பிட்டு பதவி ஏற்றனர். இதில் மாநகராட்சி அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், கவுன்சிலர்களின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
ரகசிய இடம்
பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தனித்தனி பஸ்களில் அழைத்து வரப்பட்டனர். பின்னர் பதவி ஏற்பு முடிந்ததும், மீண்டும் தனித்தனி பஸ்களில் ரகசிய இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். 

மேலும் செய்திகள்