மாவட்டம் முழுவதும் 486 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தேர்தலில் வெற்றிபெற்ற 486 வார்டு கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றனர்.

Update: 2022-03-02 16:47 GMT
திண்டுக்கல்:

486 கவுன்சிலர்கள் 

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் உள்ளன. இதில் திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள், பழனியில் 33 வார்டுகள், ஒட்டன்சத்திரத்தில் 18 வார்டுகள், கொடைக்கானலில் 24 வார்டுகள் உள்ளன.

இதேபோல் 23 பேரூராட்சிகளில் 363 வார்டுகள் என மொத்தம் 486 வார்டுகள் இருக்கின்றன. இதில் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 2 பேர், 5 பேரூராட்சிகளில் 6 பேர் என மொத்தம் 8 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து 478 பதவிகளுக்கு கடந்த மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 2 ஆயிரத்து 61 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 22-ந்தேதி 11 இடங்களில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

இதைத்தொடர்ந்து வெற்றிபெற்றவர்கள் கவுன்சிலர்களாக பதவி ஏற்கும் விழா நேற்று நடைபெற்றது. இதற்காக மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகளிலும் பதவி ஏற்பு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 

விழாவில் வார்டு வாரியாக வெற்றிபெற்றவர்கள், பதவி பிரமாணம் எடுத்து கொண்டு கவுன்சிலர்களாக பதவி ஏற்றனர். திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் 48 கவுன்சிலர்களும் பதவி ஏற்று கொண்டனர். 

கொடைக்கானல் நகராட்சி

இதேபோல் கொடைக்கானல் நகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 24 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நகரசபை கூட்டரங்கில் நேற்று நடந்தது. விழாவில் கவுன்சிலர்களுக்கு, நகராட்சி ஆணையாளர் நாராயணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தி.மு.க., ம.தி.மு.க., சுயேச்சை கவுன்சிலர்கள் என 20 பேர் பதவி ஏற்ற நிலையில் இறுதியாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் பதவி ஏற்றனர். மொத்தம் உள்ள 24 கவுன்சிலர்களில், 13 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பதவி ஏற்பு விழாவில் நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், இளநிலை பொறியாளர் செல்லத்துரை, நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த், நகரமைப்பு அலுவலர் அப்துல் நாசர் மற்றும் கவுன்சிலர்களின் குடும்பத்தினர், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே பதவியேற்பு விழா நடந்த நகராட்சி அலுவலகம் உள்ள வத்தலக்குண்டு சாலையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அதனை சீரமைத்தனர். பதவியேற்ற பிறகு தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். 

 பழனி, ஒட்டன்சத்திரம்

பழனி நகராட்சிக்கு தேர்வு செய்யப்பட்ட 33 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இவர்களுக்கு, நகராட்சி ஆணையர் கமலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் கவுன்சிலர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். 

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு தேர்வு செய்யப்பட்ட 18 கவுன்சிலர்கள் நேற்று பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு ஆணையாளர் தேவிகா பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

 23 பேரூராட்சி கவுன்சிலர்கள்

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 23 பேரூராட்சிகளில், 363 கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். அதன்படி பாளையம் பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் ராஜலட்சுமி, நத்தம் பேரூராட்சியில் 18 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் சரவணக்குமார், கன்னிவாடி பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் யுவராணி, ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் விஜயா ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

வேடசந்தூர் பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் முகமதுயூசுப், எரியோடு பேரூராட்சியில் 15 பேருக்கு செயல் அலுவலர் சந்தாநாயகி, அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 18 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் ஜெயலட்சுமி, வத்தலக்குண்டு பேரூராட்சியில் 18 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் தன்ராஜ் ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் உமா சுந்தரி, அய்யம்பாளையம் பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் பாலசுப்பிரமணி, சேவுகம்பட்டி பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் கீதா, கீரனூர் பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் அன்னலட்சுமி ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். 

வடமதுரை, நிலக்கோட்டை

நெய்க்காரப்பட்டியில் செயல் அலுவலர் பாஸ்கரன் முன்னிலையில் 15 பேரும், பாலசமுத்திரத்தில் செயல் அலுவலர் கமர்தீன் முன்னிலையில் 15 பேரும், ஆயக்குடியில் செயல் அலுவலர் மகேந்திரன் முன்னிலையில் 18 பேரும், பண்ணைக்காடு பேரூராட்சியில் செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின் முன்னிலையில் 15 பேரும், வடமதுரை பேரூராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் தாகிரா, செயல் அலுவலர் (பொறுப்பு) முகமது யூசுப் ஆகியோர் முன்னிலையில் 15 கவுன்சிலர்களும் பதவி ஏற்று கொண்டனர்.

அய்யலூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் ரோகிணி முன்னிலையில் 15 பேரும், நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரி முன்னிலையில் 15 கவுன்சிலர்களும், தாடிக்கொம்பு பேரூராட்சியில் செயல் அலுவலர் சிவக்குமார் முன்னிலையில் 15 கவுன்சிலர்களும், அகரம் பேரூராட்சியில் செயல் அலுவலர் ஈஸ்வரி முன்னிலையில் 15 பேரும், சித்தையன்கோட்டை பேரூராட்சியில் செயல் அலுவலர் ஜெயமாலு முன்னிலையில் 18 கவுன்சிலர்களும், சின்னாளப்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் நந்தகுமார் முன்னிலையில் 18 கவுன்சிலர்களும் பதவி ஏற்றனர். 

பதவி ஏற்பு விழா முடிந்தவுடன் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களின் முன்பு அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் புதிதாக பதவி ஏற்று கொண்ட கவுன்சிலர்களுக்கு மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

தலைவர், துணை தலைவர் தேர்வு

இதற்கிடையே மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல் மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றி இருக்கிறது. இதனால் மேயர், துணை மேயர், தலைவர், துணை தலைவர் பதவிகள் யாருக்கு என்பதில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. 

இதில் துணை தலைவர் பதவிகளை பிடிக்க தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்