சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி வழிபாடு
நாகை, வேதாரண்யம் பகுதி சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
வெளிப்பாளையம்:-
நாகை, வேதாரண்யம் பகுதி சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரி
ஆண்டுக்கு ஒரு முறை 9 கோள்களும் ஒரு குறிப்பிட்ட நேர்க்கோட்டில் வரும் நாள் மகா சிவராத்திரி எனவும், சிவபெருமான் சிவலிங்கமாக காட்சி அளித்த நாள் மகா சிவராத்திரி எனவும் குறிப்பிடப்படுகிறது. மகா சிவராத்திரி நாளில் சிவவழிபாடு மேற்கொண்டால் ஆண்டுதோறும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாகையில் உள்ள காயாரோகணசாமி- நீலாயதாட்சியம்மன் கோவில் உள்பட 12 சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி நாளில் வழிபட்டால், ஜோதிர்லிங்க தரிசனத்துக்கு இணையான பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது
இந்த நிலையில் மகாசிவராத்திரியையொட்டி நேற்று முன்தினம் இரவு முழுவதும் நாகை மாவட்ட சிவலாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
12 கோவில்கள்
நாகை காயாரோகணசாமி கோவில், அழகர் கோவில், காசி விஸ்வநாதர்கோவில், அமரநந்தீஸ்வரர் கோவில், மலையீஸ்வரன் கோயில், சட்டையப்பர் கோவில், கட்டியப்பர் கோவில், நடுவதீஸ்வரர்கோவில், வீரபத்திரசாமிகோவில், சொக்கநாதர் கோவில், நாகநாதசாமி கோவில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரசாமி கோவில், நாகூர்நாகநாதர் கோவில் உள்ளிட்ட 12 சிவன் கோவில்களிலும் நேற்று முன்தினம் இரவு முழுவதும் 4 கால பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்
வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி கல்யாணசுந்தரர் தம்பதி சமேதரராக எழுந்தருளி கோவில் உட்பிரகாரங்களில் வலம் வந்து வேடனுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக திலகவதி நாட்டியாலயா சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் யாழ்ப்பாணம் வரணீ ஆதினம் செவ்வந்தி நாத பண்டார சந்நிதி, கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், ஆறுகாட்டுத்துறை பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர். இதேபோல் மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் கோவில், தோப்புத்துறை வடமறைக்காடர் கோவில் மற்றும் வாய்மேடு பகுதி கோவில்களில் மகாசிவராத்திரி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை வழிபட்டனர்.