தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
கோவை
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (37). தனியார் நிறுவன ஊழியர். இந்நிலையில், கடந்த 28-ந் தேதி மணிகண்டன் வீட்டைப் பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் சங்கரன்கோலில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றார்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் அருகே வசித்து வரும் பாபு என்பவர் மணிகண்டனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தார். இதையடுத்து பாபு செல்போனில் மணிகண்டனை தொடர்பு கொண்டு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கூறினார். அதிர்ச்சியடைந்த மணிகண்டன் வீட்டின் அருகே உள்ள தனது சகோதரர் நாகராஜ் என்பவருக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார்.
உடனே அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த 10 பவுன்நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதையடுத்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்ற திருடர்களை தேடி வருகின்றனர்.