உச்சனகாளியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

8 ஊர் மக்கள் கொண்டாடும் உச்சனகாளியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது. அதில் பக்தர்கள் உற்சாகமாக பாரம்பரிய நடனம் ஆடினர்.;

Update: 2022-03-02 14:29 GMT
கோத்தகிரி

8 ஊர் மக்கள் கொண்டாடும் உச்சனகாளியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது. அதில் பக்தர்கள் உற்சாகமாக  பாரம்பரிய நடனம் ஆடினர். 

உச்சனகாளியம்மன் திருவிழா

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள திம்பட்டி கிராமத்தில் 8 கிராம படுகர் சமுதாய மக்களுக்கு பொதுவான உச்சனகாளியம்மன் கோவில் அமைந்து உள்ளது. மிகவும் பழமை வாய்ந்ததும், புகழ் பெற்றதுமான இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஒரு வார காலத்திற்கு திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா, கடந்த 21-ந் தேதி தொடங்கியது. 

இதையொட்டி ஒவ்வொரு நாளும் அம்மன் அளியூர், சாமில் திட்டு, கப்பட்டி, நாரகிரி, கடைகம்பட்டி, குன்னியட்டி, கெட்சிகட்டி, ஜக்கலோடை, கன்னேரிமுக்கு, தாலோரை, கடக்கோடு, கீழ் அனையட்டி, மேல் அனையட்டி, திம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு ஊர்வலமாக அழைத்து சென்று, விழா கொண்டாடப்பட்டது.

பாரம்பரிய நடனம்

அப்போது அம்மன் ஊர்வலமாக ஒவ்வொரு வீட்டிற்கு வரும்போதும், கரகத்தை தூக்கி வரும் பூசாரியின் கால்களில் பக்தர்கள் மூலிகை பூக்கள் மற்றும் மஞ்சள் நீரை ஊற்றி வழிபட்டனர். இதன் மூலம் மழை பொழியவும், தேசம் செழிக்கவும், அம்மை போன்ற கொடிய நோய்கள் மக்களுக்கு வராமலும் தடுக்க அம்மன் அருள் புரிவார் என்பது ஐதீகம். இந்த ஊர்வலத்தில் கடும் விரதம் இருந்த பக்தர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திருவிழாவின் நிறைவு நாளான நேற்று பல கிராமங்களுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட உச்சன காளியம்மனை திம்பட்டி கோவிலுக்கு திரும்ப அழைத்து வரும் கரக ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் வந்தவர்கள் கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் குளித்து, பாரம்பரிய நடனம் ஆடியவாறு, அம்மனை கோவிலுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. 

மாகாளியம்மன் பண்டிகை

இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் ஆட்டை பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் ஒரு வார காலமாக கடும் விரதம் மேற்கொண்டு வந்த பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று அசைவ உணவுகளை சமைத்து, அருகில் வசிப்பவர்களுக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் பகிர்ந்து அளித்து உண்டு தங்களது விரதத்தை முடித்து கொண்டனர். 

இதில் திம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். இதேபோன்று தும்பூர், ஓடேன், பேரகனி, கேர்கம்பை, கேர்பெட்டா உள்ளிட்ட கிராமங்களில் மாகாளியம்மன் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒரு வார காலம் நடந்து வந்த மாகாளியம்மன் பண்டிகை நேற்றுடன் நிறைவடைந்தது.'

மேலும் செய்திகள்