பச்சை தேயிலை விலை கிலோவுக்கு ரூ.16.52 நிர்ணயம்
பிப்ரவரி மாத குறைந்தபட்ச விலையாக பச்சை தேயிலை விலை கிலோவுக்கு ரூ.16.52 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.;
குன்னூர்
பிப்ரவரி மாத குறைந்தபட்ச விலையாக பச்சை தேயிலை விலை கிலோவுக்கு ரூ.16.52 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
விலை நிர்ணயம்
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பறித்து வினியோகிக்கும் பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைப்பது இல்ைல என்றும், அரசு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி தேயிலை வாரியம் மூலம் மாதந்தோறும் பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மாவட்ட அளவிலான விலை நிர்ணய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவால் கடந்த பிப்ரவரி மாதம் விவசாயிகள் வினியோகித்த பச்சை தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.16.52-ஐ நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
உறுதிப்படுத்த வேண்டும்
இதுகுறித்து தேயிலை வாரிய தென்மண்டல செயல் இயக்குனர் பாலாஜி கூறியதாவது:- 2021-ம் ஆண்டின் தேயிலை(சந்தைப்படுத்துதல்) கட்டுபாட்டு ஆணையின்படி பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
பிப்ரவரி மாத குறைந்தபட்ச விலையானது, ஜனவரி மாதத்தில் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்த சி.டி.சி. தேயிலைத்தூளின் விற்பனை விலையை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த விலையை நீலகிரியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதை தேயிலை வாரிய கள அதிகாரிகள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், தேயிலை வளர்ச்சி உதவி இயக்குனர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.