சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா

கூடலூர் பகுதியில் சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்ட விடிய விடிய வழிபாடு நடத்தினர்.

Update: 2022-03-02 14:29 GMT
கூடலூர்

கூடலூர் பகுதியில் சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்ட விடிய விடிய வழிபாடு நடத்தினர்.

மகா சிவராத்திரி விழா

தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மகா சிவராத்திரி விழாவில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள நம்பாலக்கோட்டை சிவன் மலையில் மகா சிவராத்திரி விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு ஹோமங்கள், அபிஷேக மற்றும் அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 4.30 மணி வரை 4 கால பூஜையும், நவக்கிரக ஹோமம் உள்பட பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் விடிய விடிய கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். 

கடும் குளிரிலும்...

இதேபோன்று கூடலூர் கல்லீங்கரை சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி ஏராளமான பெண்கள் அகல் விளக்குகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து விடிய விடிய அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. மேலும் செவிடிப்பேட்டை சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. 

தொடர்ந்து கூடலூர் அருகே ஈசன் மலை, பார்வுட் பசுவண்ணன், எருமாடு சிவன் கோவில், நடுவட்டம் மாதேஷ்வரன், மசினகுடி கேம்ப் உள்பட அனைத்து சிவன் கோவில்களிலும் விடிய விடிய மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது கலந்து கொண்டனர். இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, 2 ஆண்டுகளுக்கு பிறகு மகா சிவராத்திரி விழா கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.

மேலும் செய்திகள்