தூத்துக்குடி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 402 வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு
தூத்துக்குடி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 402 வார்டு உறுப்பினர்கள் நேற்று(புதன்கிழமை) பதவி ஏற்றுக் கொண்டனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 402 வார்டு உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களை உறவினர்கள், கட்சி பிரமுகர்கள் உற்சாகமாக வரவேற்று அழைத்து சென்றனர்.
உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகள், கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டுகள், காயல்பட்டினம் நகராட்சியிலுள்ள 18 வார்டுகள், திருச்செந்தூர் நகராட்சியிலுள்ள 27 வார்டுகள் மற்றும்
17 பேரூராட்சிகளில் உள்ள 261 வார்டுகள் ஆக மொத்தம் 402 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 22-ந் தேதி வெளியிடப்பட்டன.
பதவியேற்பு விழா
இதைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது.
விழாவை முன்னிட்டு நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள் முன்பு பந்தல்கள் போடப்பட்டும், வாழைமரங்கள் கட்டப்பட்டு இருந்தன. அலங்கார தோரணங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.
நேற்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கியது. இதனால் காலை முதல் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் குடும்பத்தினருடன் உள்ளாட்சி அலுவலகங்களுக்கு வந்தனர். தூத்துக்குடி மாநகராட்சியில் ஆணையாளர் சாரூஸ்ரீ மற்றும் அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் ஆணையாளர், செயல் அலுவலர்கள் தலைமை தாங்கி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தனர். அதன்படி உறுப்பினர்கள் ஒவ்வொருவராக உறுதிமொழி ஏற்று கவுன்சிலராக பதவியேற்றனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி நகராட்சியிலுள்ள 36 வார்டுகளில், தி.மு.க.-19, மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்டு-5, அ.தி.மு.க.-4, ம.தி.மு.க.-2, இந்திய கம்யூனிஸ்டு-1, பா.ஜனதா-1, அ.ம.மு.க.-1, சுயேச்சைகள்-3 ஆகியோரும், காயல்பட்டினம் நகராட்சியிலுள்ள 18 வார்டுகளில் தி.மு.க.-4, சுயேச்சைகள்-14 கவுன்சிலர்களும், திருச்செந்தூர் நகராட்சியிலுள்ள 27 வார்டுகளில் தி.மு.க.-21, அ.தி.மு.க.-2, காங்கிரஸ்-1, சுயேச்சைகள்-3 ஆகியோரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
உறவினர்கள் உற்சாகம்
17 பேரூராட்சிகளில் பதவி ஏற்ற 261 வார்டு கவுன்சிலர்களை, அந்தந்த செயல் அலுவலர்கள் வாழ்த்தினர். தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும், ஆணையாளர், செயல் அலுவலர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதனால் மாவட்டம் முழுவதும் 402 வார்டு உறுப்பினர்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழா முடிந்து வெளியில் வந்தவர்களை, உறவினர்கள், கட்சி பிரமுகர்கள் உற்சாகமாக வாழ்த்தி சால்வைகள், மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.
பாதுகாப்பு
பதவியேற்பு விழாவை மாவட்டம் முழுவதும் முன்னிட்டு 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 10 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 31 இன்ஸ்பெக்டர்கள், 48 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 440 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.