தூத்துக்குடி மின்வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டதால், தூத்துக்குடி மின்வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்
தூத்துக்குடி, மார்ச்.3-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டதால், தூத்துக்குடி மின்வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
உதவி செயற்பொறியாளர்
தூத்துக்குடியில் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் சுடலைமுத்து. இவர் தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார்.
இவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலும் புதுக்கோட்டை, சாயர்புரம் ஆகிய இடங்களில் உதவி பொறியாளராகவும், சாத்தான்குளத்தில் உதவி செயற்பொறியாளராகவும் பணியாற்றி உள்ளார்.
அதிரடி சோதனை
இந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.45 லட்சம் சொத்து சேர்த்ததாக சுடலைமுத்து மற்றும் அவருடைய மனைவி மீது தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, தென்காசி மாவட்ட இன்ஸ்பெக்டர் அனிதா ஆகியோர் தலைமையிலான 2 போலீஸ் குழுவினர் நேற்று தூத்துக்குடி மேல சண்முகபுரத்தில் உள்ள சுடலைமுத்து மற்றும் அவரது மாமனார் ஆகியோரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
முக்கிய ஆவணங்கள் சிக்கின
காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு வரையிலும் நீடித்தது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.