கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று(புதன்கிழமை) கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது;

Update: 2022-03-02 13:05 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று முதல் தொடங்கியது. சாம்பல் புதன் கடைப்பிடிக்கப்பட்டது.
தவக்காலம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஏசுவின் பாடுகளை நினைவு கூறும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் உண்ணா நோன்பு இருத்தல், அசைவ உணவு தவிர்த்தல், ஜெபம் செய்தல் உள்ளிட்டவைகளை கிறிஸ்தவ மக்கள் மேற்கொள்வார்கள். இந்த தவக்காலம் நேற்று முதல் தொடங்கியது. தொடக்கநாள் சாம்பல் புதனாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி சின்னக்கோவிலில் நேற்று காலை பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
சாம்பல் புதன்
சாம்பல் புதனை முன்னிட்டு கடந்த ஆண்டு குருத்தோலை பண்டிகைக்கு பிறகு மக்கள் வாங்கி சென்ற குருத்தோலைகள் ஆலயத்தில் ஒப்படைக்கப்பட்டு, அந்த ஓலைகள் எரிக்கப்பட்டன. அதன் சாம்பலை கொண்டு பங்கு மக்கள் நெற்றியில் பிஷப் ஸ்டீபன் அந்தோணி, சிலுவை வரைந்து ஆசி கூறினார். நிகழ்ச்சியில் கிறிஸ்தவ மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் பங்கு தந்தை குமார் ராஜா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதே போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து 40 நாட்கள் தவக்காலம் முடிவில் புனிதவெள்ளியும், ஈஸ்டர் பண்டிகையும் நடக்கிறது.

மேலும் செய்திகள்