சமூக போலீஸ் பணிக்கு முக்கியத்துவம்: புதிய போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக போலீஸ் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என புதிய போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் பாரபட்சம் இன்றி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, சமூக போலீஸ் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படம் என்று புதிய போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறினார்.
பொறுப்பேற்பு
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த எஸ்.ஜெயக்குமார் சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து சென்னை துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த எல்.பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் நேற்று காலை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு 32-வது போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். உளுந்தூர் பேட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கி உள்ளார். தொடர்ந்து திருத்துறைபூண்டி, கோவை, ஈரோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளார். முதலில் இந்திய கடற்படையில் பணியில் சேர்ந்த பாலாஜி சரவணன், அந்த பணியை உதறிவிட்டு டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு எழுதி தமிழக போலீஸ் பணிக்கு வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரபட்சம் இன்றி..
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தவித பாரபட்சமும் இன்றி சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடியிசம் எந்த வகையிலும் அனுமதிக்கப்படாது. போலீஸ் பொதுமக்களின் நண்பன் என்ற வகையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறையின் செயல்பாடுகள் இருக்கும். சமூக அமைதியை உருவாக்கும் வகையில் சமூக போலீஸ் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். மாவட்டத்தில் விபத்துக்களை குறைக்க முன்னுரிமை கொடுக்கப்படும்.
சமூக போலீஸ் பணி
தூத்துக்குடி மாவட்டத்தை பற்றி நான் கேள்விப்பட்ட வரை மக்கள் பாசக்காரர்கள். அதேநேரத்தில் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். இதனால் சில முடிவுகளை உணர்ச்சி வசப்பட்டு எடுத்து விடுகிறார்கள். எனவே, மக்களின் சமூக மாற்றத்துக்கு ஏற்ப சில யோசனைகளை வைத்து உள்ளேன். அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். மக்களோடு இணைந்த போலீஸ் துறை என்ற வகையில் சமூக போலீஸ் பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். மக்களின் எண்ணங்கள், விருப்பங்கள், தேவைகளை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் சட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
போதைப்பொருள் கடத்தல் தடுப்பு
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகள் வழியாக போதைப் பொருள் கடத்தலை தடுக்க கடலோர காவல் படை உள்ளிட்ட தொடர்புடைய மற்ற அமைப்புகளோடு இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பழக்கத்தை தடுக்க மாணவர்கள், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களோடு இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். போலீஸ் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.