ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.6 கோடி அரசு நிலம் மீட்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.6 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது.

Update: 2022-03-02 12:41 GMT
ஸ்ரீபெரும்புதூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணுர் ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து இடத்தை அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது அரசுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து அதில் 3 ஏக்கரில் தர்பூசணி பயிரிடப்பட்டிருந்தது.

கடைகள் கட்டி ஆக்கிரமித்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த வாரம் இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ஜெகநாதன் மற்றும் அதிகாரிகள் ஸ்ரீபெரும்புதூர் போலீசாரின் உதவியுடன் பொக்லைன் எந்திரம் கொண்டு சென்றனர்.

இதை அறிந்த ஆக்கிரமிப்பாளர்கள் பொக்லைன் எந்திரம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். போலீசார் குறைவாக இருந்ததால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் நேற்று ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ஜெகநாதன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் மற்றும் பெண் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்றினர். அப்போது சிலர் ஓடிவந்து பொக்லைன் எந்திரம் முன் வந்து அமர்ந்து தடுத்தனர்.

பெண் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறபடுத்தி அரசு நிலத்தை மீட்டனர். அரசுக்கு சொந்தமான இடம் என எச்சரிக்கை பலகையை அதிகாரிகள் வைத்து சென்றனர். இதன் மூலம் ரூ.6 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்